
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தமிழக அமைச்சர்கள் இன்று தாக்கல் செய்தனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபிறகு சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். சின்னம் தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தினகரன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இரு அணிகளும் தங்கள் தரப்பு கூடுதல் ஆவணங்களை இன்று (செப். 29) தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இதனை அடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி. சண்முகம் மற்றும் மைத்ரேயன் எம்.பி., கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று டெல்லி வந்துள்ளனர்.
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பிரமாண பத்திரங்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.
113 எம்.எல்.ஏ.க்கள், 43 எம்.பி.க்கள் ஆகியோர் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணிக்கு ஆதரவாக உள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.