
ஆர்.கே.நகரில், தினகரன் தரப்பில் இருந்து பண பட்டுவாடா செய்ததற்கான வீடியோ ஆதாரங்களை, எதிர் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.
பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதால், தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சசிகலா புஷ்பா, தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார்.
மேலும், காவல் துறை மற்றும், அரசு அதிகாரிகளை பயன்படுத்தி, வாக்காளர்களை தமக்கு வாக்களிக்கும் படி தினகரன் மிரட்டி வருவதாகவும் சசிகலா புஷ்பா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில், வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில், பணப்பட்டுவாடாவை நிரூபிக்கும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
அத்துடன், முதல்வர் உள்பட, மேலும் அமைச்சர்கள் பலருக்கும் அதில் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று இரவு, பண புழக்கத்தை காரணம் காட்டி ஆர்.கே.நகர் தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, தினகரன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
தமிழக பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளும், தேர்தல் ஆணையத்திடம் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருவதால், தினகரன் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு, தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர் வரும் 6 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் நிற்க முடியாது என்பதால், தினகரனும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.