
நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆர்கே நகர் இடைத் தேர்தல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டால், எப்படி எதிர்க் கொள்வது என்பது உள்பட பல்வறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து என்பது மத்திய அரசின் திட்டமிட்ட நாடகம் என குற்றம்சாட்டினார்.
எதிர்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டு காரணமாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் விஜய பாஸ்கர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனைக்கும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்ற அச்சம் காரணமாக திட்டமிட்டு சதி செய்து தேர்தலை ரத்து செய்துவிட்டதாக தினகரன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் நடக்கும் போது அதில் போட்டியிட்டு நானே வெற்றிபெறுவேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.