ஆர்.கே.நகர் மக்களுக்கு இன்னொரு வாய்ப்பு.... திரும்பவும் அரசியல்வாதிகளிடம் ஓட்டுக்கு எவ்வளவு வாங்கலாம்?

 
Published : Apr 10, 2017, 04:18 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
ஆர்.கே.நகர் மக்களுக்கு இன்னொரு வாய்ப்பு.... திரும்பவும் அரசியல்வாதிகளிடம் ஓட்டுக்கு எவ்வளவு வாங்கலாம்?

சுருக்கம்

another chance for rk nagar people

எதை செய்தாலும், எப்படி வருத்தினாலும், மக்களுக்கு பணம் கொடுத்து விட்டால், வாக்குகள் நிச்சயம் என்பது அரசியல் வாதிகளின் கணக்கு.

இந்த நேரத்தில் யாரோ கொடுக்கும் பணத்தை எதற்காக இழக்க வேண்டும்? என்று வாக்குகளை விற்பது மக்களின் மன ஓட்டம்.

கோடி கணக்கில் ஊழல் செய்யும் பெரிய மனிதர்கள் எல்லாம், உணவு சாப்பிட்ட கை கழுவிய ஈரம் காய்வதற்குள், மாற்று  முகாமுக்கு தாவுவதும், எதிர் தரப்போடு கை கோர்ப்பதும் சாதாரண விஷயம்.

சாதாரண மக்களை பொறுத்தவரை, ஒரு சின்ன உதவிக்கு கூட கடைசி வரை விசுவாசமாக இருப்பதுதான் பலவீனம்.

இந்த பலவீனமும், அறியாமையும் தான், ஆர்.கே.நகர் மக்களை மட்டுமல்ல, எல்லா தொகுதி மக்களையும், வஞ்சக வலையில் சிக்கும் மீன்களாக ஆக்கி விடுகிறது.

வெள்ளப்பெருக்கால் வீடு மூழ்கியபோது எட்டி பார்க்காதவர்கள், நிவாரணம் என்ற பெயரில் மணமக்கள் கழுத்தில் ஸ்டிக்கர் ஒட்டி விசுவாசத்தை காட்டியவர்கள் எல்லாம், தேர்தல் பிரச்சாரத்தில் வள்ளல் கர்ணனாக மாறி, வாரி வாரி இறைத்தார்கள்.

சாதாரண மக்களுக்கு தரமான கல்வியோ, மருத்துவ வசதியோ, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியோ செய்து தராத அரசியல்வாதிகள், வாக்கு ஒன்றுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வரை 89 கோடி ரூபாயை வாரி இறைக்க முடியும் என்றால், அதை என்ன சொல்வது?.

அதே பாணியில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 100 கோடி ரூபாய் அளவுக்கு, மக்கள் நல திட்டங்களை செயல் படுத்தினால், மக்களின் வாழ்க்கை தரமே உயரும் அல்லவா?

அது ஒருபுறம் இருக்கட்டும், தமிழக அரசே, 3 லட்சம் கோடி ரூபாய் கடனை செலுத்த முடியாமல் வட்டி கட்டி கொண்டிருக்கும் நிலையில், சாதாரணமாக, ஒரு கட்சி மட்டுமே 100 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்கிறது என்றால், மற்ற கட்சிகளின் செலவையும் சேர்த்தால் எப்படியும், 200 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் அல்லவா?

மேலும், ஒரே வாரத்தில் ஒரு அமைச்சர் 120  கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் காட்டாமல் வசூலிக்க முடிகிறது என்றால், மற்ற அமைச்சர்கள் எல்லாம் எந்த அளவுக்கு வசூலிக்க முடியும்?.

அதேபோல், இதுவரை இத்தனை ஆண்டுகளாக முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் எவ்வளவு வசூலித்து இருப்பார்கள். அந்த பணம் எல்லாம் இப்போது, எங்கே இருக்கிறது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ எல்லாம், இதுவரை என்ன செய்து கொண்டிருக்கின்றன? 

அமைச்சர்களும், அதிகாரிகளும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை, வெளியில் தெரியாமல், குவிக்க முடியும் என்றால், அமுக்க முடியும் என்றால், அந்த துறைகள் எல்லாம் செயலிழந்து விட்டன என்றுதானே பொருள்?   

இதுவரை தூங்கியது போதும், இனியாவது விழித்துக் கொண்டு செயல் பட்டால், சட்ட விரோதமாக குவித்த பணங்கள், சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்யலாம் அல்லவா?

அதில் மட்டும் பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டால், தமிழ்நாட்டின் கடன் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் கடனையே அடைத்து விடலாம். 

எஞ்சிய பணத்தை கொண்டு மக்கள் நல திட்டங்கள் அனைத்தையும் செயல் படுத்தலாம். ஆனால் அதை செய்ய அரசுகள் அனுமதிக்குமா? என்பதுதான் கேள்வி.

அதை விடுவோம். ஆர்.கே.நகரை ஒட்டி மட்டுமல்ல. கரூர் அன்புநாதன் உள்பட பல அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு, பல முக்கிய ஆவணங்கள், முக்காத ஆவணங்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன? அதனால் என்ன பலன் விளைந்தது?

அதுபோலத்தான், அடுத்து மற்றொரு தேதியில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். மீண்டும் பணம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும். ஆனாலும் தேர்தல் நடந்து முடிவு அறிவிக்கப்படும்.

பணத்தையும், பரிசு பொருட்களையும் சந்தோசமாக வாங்கிக்கொண்டு, மக்களும், ஒட்டு போட்டு ஜெயிக்க வைப்பார்கள். ஜெயித்தவர்களும், பதவி நாற்காலியில் அமர்ந்து, அடுத்த தேர்தலில் விநியோகிப்பதற்காக பணம் சுருட்டுவார்கள்.

மக்கள் மட்டும், வெள்ளநீரை அகற்றக்கோரி மழை காலத்திலும், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கக் கோரி வெயில் காலத்திலும் வீதிக்கு வந்து போராடிக் கொண்டே இருப்பார்கள். எல்லாம் ஒரு அரசியல் சுழற்சி தானே?

வாழ்க ஜனநாயகம்... வளர்க பணநாயகம்... என்று முழக்கம் எழுப்பாததுதான் பாக்கி.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்