
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து மார்ச் 20 க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டாக பிளவடைந்தது.
இதையடுத்து அதிமுக எங்களுக்குத்தான் சொந்தம் எனவும் நாங்கள் தான் உண்மையான அதிமுகவினர் எனவும் ஓ.பி.எஸ் அணியும் சசிகலா அணியும் மாறி மாறி கூறி வருகின்றனர்.
மேலும் ஒ.பி.எஸ் தரப்பினரனை சசிகலாவும், சசிகலா தரப்பினரை ஒ.பி.எஸ் தரப்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனும் கட்சியில் இருந்து நீக்குவதாகவும் தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து சசிகலா கட்சி விதிகளை மீறி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாகவும், எனவே அவரின் நியமனம் செல்லாது எனவும் ஒ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
அதற்கான விளக்கங்களின் விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 20 ஆம் தேதிக்குள் முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதற்க்கான வேட்பாளர்களை அந்ததந்த கட்சிகள் தேர்வு செய்து மனுதாக்கல் நடைபெற்று வருகிறது.
சசிகலா தரப்பில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஒ.பி.எஸ் தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர், சசிகலா தரப்பில் துணை சபாநாயகரும் எம்.பியுமான தம்பிதுரை நஜீம் ஜைதியை சந்தித்து ஓ.பி.எஸ் புகாரை ஏற்க கூடாது என வலியுறுத்தினார்.
அதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இல்லை சின்னம் ஒதுக்குவது குறித்து மார்ச் 20க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சசிகலா, தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.