எடப்பாடியாருக்கு திமுக நடத்தப்போகும் பாராட்டு விழா... அதிரடியாக களமிறங்கிய மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Sep 5, 2019, 1:24 PM IST
Highlights

சொன்னது போல் எடப்பாடி பழனிசாமி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் அவருக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 
 

சொன்னது போல் எடப்பாடி பழனிசாமி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் அவருக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை கவர 14 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அப்போது, நியூயார்க் நகரில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழகத்துக்கு வருவதாகக் கூறப்படும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் வந்தால் தி.மு.க. சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தத் தயாராக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்லவிழாவில் பேசிய அவர், ’’தவறான பொருளாதார கொள்கைகளால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு வருகிறது. அனைத்துக் கட்சி தலைவர்கள் எல்லாம் மேடையில் இருப்பதால் நாகரீகம் கருதி அரசியல் பேச விரும்பவில்லை.

ஆனாலும் அரசியல் பேசாமல் சென்றால் வெள்ளக்கோவில் சாமிநாதன் என்னை கோபித்துக்கொள்வார். அமெரிக்காவிற்கு சென்று அங்கு அப்பட்டமான பொய் ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறும் தமிழக அரசு, எங்கே யாருக்கு வேலை அளித்துள்ளது எனக் கூற முடியுமா? 

தமிழகத்தில் 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் அப்பட்ட பொய் ஒன்றை முதல்வர் கூறியிருக்கிறார். , உண்மையிலேயே தமிழகத்துக்கு முதலீடுகளை முதலமைச்சர் பெற்றிருந்தார் என்று சொன்னால், திமுக சார்பில் நாங்களே அவருக்கு பாராட்டு விழா நடத்த தயங்கமாட்டோம்’’ என அவர் தெரிவித்தார்.  

click me!