
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிரான வழக்கு விசாரைணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. எடியூரப்பா பதவியேற்றது செல்லுமா ? பெரும்பான்மையை நிரூபிக்க டைம் கொடுக்குமா? தப்புவாரா? என்பது இன்று தெரியவரும்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார்.
இது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க வரிந்து கட்டிய ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது.இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும், ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமியும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ‘ரிட்’ வழக்கு தொடுத்தனர். வழக்கில், எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்
இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார்.இந்த அமர்வு நள்ளிரவு கடந்து 2.11 மணிக்கு தன் விசாரணையை தொடங்கியது. நேற்று அதிகாலை 5.28 மணிக்கு விசாரணை முடிந்தது.
இதையடுத்து, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், எடியூரப்பா முதலமைச்சர் பதவி ஏற்பதை இந்த வழக்கின் தீர்ப்பு கட்டுப்படுத்தும் எனவும், ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு எடியூரப்பா 15 மற்றும் 16 தேதிகளில் எழுதிய கடிதங்களை வாசித்து ஆராய வேண்டிய து உள்ளது. அந்த கடிதங்களை கோர்ட்டில் அட்டார்ஜி ஜெனரல், இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதனால், இந்த வழக்கு ,இன்று காலை 10.30-க்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்று எடியூரப்பா பதவியேற்றது செல்லுமா ? பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் டைம் கொடுக்குமா? எடியூரப்பா தப்புவாரா? என்பது இன்று தெரியவரும்.