
கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக விசாரிக்க சென்ற போலீஸ் உயரதிகாரிகளிடம் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறைகளில் வேறு ஆட்கள் தங்கி இருக்கிறார்களா என்று சோதிக்க வேண்டும் என நேற்றே போலீசார் வந்தபோது அவர்களை அனுமதிக்க முடியாது என மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இன்பதுரை உள்ளிட்டவர்களும் மாநிலங்களைவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் அடக்கம்.
ஒருகட்டத்தில் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். எங்களை இதுபோன்று அகற்ற நினைத்தால் அவ்வளவுதான். என்று அதிகாரிகளை மிரட்டினர். இதையடுத்து போலீசார் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் நேற்று டி.ஜி.பியை கவர்னர் அழைத்து கூவத்தூர் ரிசார்ட் பற்றி கேட்க டி.ஜி.பி பதில் சொல்ல முடியாமல் தடுமாறியுள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட் குறித்த சகல விபரங்களையும், மாவட்ட போலீஸ் எஸ்.பி முத்தரசி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதையும், 4 ஐ.ஜி.க்கள் சென்றும் ரிசார்ட் உள்ளே நுழைய முடியாமல் போலீசார் திருப்பி அனுப்பபட்டதையும், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கவர்னரிடம் விளக்கமாக தகவல் சொல்ல இதுபற்றி டி.ஜி.பியிடம் கவர்னர் விளக்கம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி.செந்தாமரை கண்ணன், மாவட்ட எஸ்.பி முத்தரசி ஆகியோரை அழைத்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அதிரடி போலீசாருடன் ரிசார்ட்டுக்குள் நுழைந்த அவர்களை உள்ளே விடாமல் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனை வரும் வகையில் தொடர்ந்து நீங்கள் இங்கு தங்கி உள்ளீர்கள். தினமும் அடிக்கடி மோதல் நடக்கிறது. பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்படுகின்றனர்.
ரிசாட்டுக்குள் நூற்றுக்கணக்கான அடியாட்கள் உள்ளனர். தயவு செய்து எல்லோரும் கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுகொண்டனர்.
ஆனால் தாங்கள் கலைந்து செல்ல முடியாது. இது எங்கள் உரிமை என்றெல்லாம் பேசி அமைச்சர்கள் அவர்களுடன் வாக்குவதாத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்று இரவுக்குள் அங்கு உள்ள அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிகிறது.