
சசிகலாவுடன் இணைந்து பயணிக்க தயார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த நிலையில் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை தீவிரமாகி வருகிறது. எதிர்வரும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து தன்னை ஓரம் கட்டுவதை உணர்ந்துகொண்ட ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒரு சிலர் மட்டுமே அவரையும் அவரது இல்லத்தில் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களோ திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என கூறியுள்ளனர். இது ஒருபுறம் உள்ள நிலையில் சசிகலாவின் ஆதரவாளரும் அதிமுகவின் முன்னாள் தென்சென்னை வடக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ஆவின் வைத்தியநாதன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆதரவு நியூஸ்ஜெ தொலைக்காட்சியை அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவிற்கு தாரைவார்த்து விட்டனர். எதிர் காலத்தில் கட்சியையும் தாரைவார்த்து விடுவார்கள், நியூஸ்ஜெ தொலைக்காட்சியின் சிஇஓவாக ராஜவேலு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களான நாங்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறோம், முனுசாமி சி.வி சண்முகம் இடையே பல குவாரிகள் கை மாறியுள்ளதால் இருவரும் ஒற்றுமையாக உள்ளனர். நியூஸ் ஜெ தொலைக்காட்சி அதிமுக தொண்டர்களின் பணத்தால் உருவானது.
சசிகலாவின் எண்ணம் தொண்டர்களின் மனநிலையை சார்ந்ததுதான். இப்போது மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் இதுவரை எப்போதும் சசிகலாவை ஆதரிக்க மாட்டேன் என சொன்னதில்லை, இன்று சந்தித்த எங்களிடம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட தயார் என ஓபிஎஸ் கூறியுள்ளார், எடப்பாடிக்கு பதிலாக சசிகலாவின் தலைமையை ஏற்கலாம் என ஓபிஎஸ் கூறிவிட்டார், சசிகலாவின் எண்ணம் ட்சி ஒன்றாக வேண்டும் என்பதுதான். தேவைப்பட்டால் சசிகலாவை கண்டிப்பாக ஓபிஎஸ் சந்திப்பார், சசிகலா விரும்பினால் ஓபிஎஸ்சுடன் அவரையும் சேர்த்து பொது குழுவிற்கு அழைத்துச் செல்வோம். சசிகலா ஆதரவாளர்கள் நாங்களும் பொதுக்குழு செல்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனால் எதிர்வரும் அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு பதற்றத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது