
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியிலிருந்து சபாநாயகர் தனபால் பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி செய்வதறியாது திகைத்து நிற்பதாகக் கூறப்படுகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் அதுதொடர்பாக ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு மீதான ஆதரவை வாபஸ் பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அவர்கள் கர்நாடக மாநிலம் குடகில் தங்கியிருப்பதால் விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்டனர். அதை ஏற்க சபாநாயகர் மறுத்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தை நாடினர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிட்டு இருக்கும் எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும்படி தனபாலை தயார் செய்திருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த சபாநாயகர், இதனால் எதிர்காலத்தில் தனக்கு பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால் தற்பொழுது பின்வாங்குவதாக கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்களை தகுதிநீக்கம் செய்ய மனமில்லை என்பதால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என தனபால் பழனிச்சாமியிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
சபாநாயகரின் முடிவால் தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனால் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்வை ஒத்திப்போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.