
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதை ஒட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு பூங்கொத்து பரிசளித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்தினார்.
இதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் கே.ஏ.செங்கோட்டையன். அதை எடப்பாடி பழனிசாமி தனது பக்கத்தில் ரிடிவிட் செய்துள்ளார். இது அரசியல் ரீதியான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் கால நிகழ்வுகள், கே.ஏ.செங்கோட்டையன் குறித்து பல்வேறு வதந்திகளை அரசியல் மட்டத்தில் உலவச்செய்தது. இதற்குக் காரணம், டிடிவி தினகரன். சென்ற வாரம் திடீரென அவை முன்னவராக துணை முதல்வர் ஓபிஎஸ்., நியமிக்கப் பட்டார். அப்போது அதற்கு முன்னர் வரை அவை முன்னவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் இருந்தார். அவரிடம் இருந்து இந்தப் பதவியைப் பறித்து ஓபிஎஸ்ஸிடம் கொடுத்தது அப்போது பரபரப்பையும் அனுமானங்களையும் ஏற்படுத்தியது.
கடந்த 2011- 16 வரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டசபை அவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுபட்டதால் அந்தப் பதவி ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறிக்கப்பட்டது. பின் சசிகலா ஆதரவாளரான செங்கோட்டையன் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். பின்னர் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்ட நிலையில், மீண்டும் ஓபிஎஸ்ஸிடம் இந்தப் பதவி வந்துள்ளது. இருப்பினும், மூத்த தலைவரான செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைக்கப் பட்டதாக புகார் எழுந்தது.
இதனிடையே, திட்டமிட்டு செங்கோட்டையனை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அசிங்கப்படுத்தி விட்டதாக கடந்த வாரம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தினகரன் கூறியிருந்தார். அப்போது அவர், ஓபிஎஸ்சுக்கு அவை முன்னவர் பதவி கொடுக்கப்பட்டதே செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவதற்காக தான். கட்சியில் மூத்த நிர்வாகியான அவரை அசிங்கப்படுத்துவதற்காக ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் இணைந்து தான் இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர் என்று கூறியிருந்தார்.
கட்சியில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே சிண்டு முடியும் வேலையில் சிலர் இருக்க, இன்று தனது பிறந்த நாளுக்கு முதல்வரைச் சந்தித்து ஆசி பெற்று புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் செங்கோட்டையன்.