
சட்டமன்றத்தில் சபாநாயகர் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனின் பேச்சு, அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சபாநாயகர் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறார். ஆளுநர் உரை மீதான விவாதம் தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஆளுநர் உரை தொடர்பாக திமுக உறுப்பினர் அன்பழகன் பேசியதை அவை குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்குகிறார். ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவகமாக மாற்றவது தொடர்பாகவும் மெரினாவில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பாகவும் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தது.
எனவே ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது திமுக உறுப்பினர், அன்பழகன், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைப்பது சட்டவிரோதமானது எனவும் மக்களின் வரிப்பணத்தை, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைப்பது சரியா என பேசினார். ஆனால் அவரது பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. ஆளுநருக்கு எதிராக பேசக்கூடாது என தெரிவித்து அன்பழகன் கருத்து நீக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராகத்தானே பேசக்கூடாது. ஆளுநர் உரை தொடர்பாகத்தான் அன்பழகன் பேசினார். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆளுநர் சென்னா ரெட்டியை கொச்சையாகவெல்லாம் பேசியிருக்கிறார்.
அன்பழகனின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கியதால் வெளிநடப்பு செய்தோம். மீண்டும் சட்டமன்றத்துக்குள் சென்று எங்கள் பணியை ஆற்றுவோம் என ஸ்டாலின் தெரிவித்தார்.