
கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேர் இதுவரை கரை திரும்பவில்லை. டவ் - தே புயல் எச்சரியை அறிந்து கரை திரும்பிய மீனவர்களின் படகு புயல் சிக்கிய மூழ்கியதாக தகவல்கள் வெளியாகின. நாகை சாமந்தான் கோட்டையச் சேர்ந்த மணிகண்டன், அவருடைய தந்தை இடும்பன், அண்ணன் மணிவேல், நாகூர் பட்டினச்சேரியைச் சேர்ந்த தினேஷ், இளஞ்செழியன் உள்ளிட்ட 9 மீனவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் 9 மீனவர்களின் நிலை என்னவென்று அறியாமல் அவர்களுடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். மீனவர்களை மீட்டுத் தரக்கோரி அவருடைய குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை இயக்குநர் ஆகியோருக்கு கண்ணீர் மல்க மனு கொடுத்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் காணாமல் போன 9 நாகை மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஏப்.29-ம் தேதி அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகையைச் சேர்ந்த 9 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அந்த மீனவர்களின் படகு டவ்-தே புயலில் சிக்கியிருக்கலாம் என, அவர்களது குடும்பத்தினர் அஞ்சுவதாகவும், அவர்களுடைய பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 9 மீனவர்களையும் மீட்க பிரதமர் உடனடியாக இந்தியக் கடற்படை மற்றும் விமானப் படைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.