தான் மட்டுமே ஜெயிக்கணும்... கமல்ஹாசனின் சுயநலம்... புட்டுப்புட்டு வைத்த சி.கே.குமரவேல்..!

By Thiraviaraj RMFirst Published May 20, 2021, 12:33 PM IST
Highlights

ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்று ஒரு தலைவர் நினைத்ததால், தலைவர் என்ற பொறுப்பை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம்.
 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல், கமல்ஹாசன் தலைமை சரியில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் ம.நீ.ம ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. கோவை தெற்கு தொகுதியில், வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்தபோதும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1358 வாக்குகள் வித்தியாசத்தில், தோல்வியடைந்தார் கமல்ஹாசன். இதையடுத்து, ம.நீ.ம கட்சியின் பல நிர்வாகிகள், கட்சியிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.

2019 நாடாளுமன்ற தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சி.கே.குமரவேல் விலகினார். ஆனால் பின் மீண்டும் சில மாதங்களிலேயே மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். இந்நிலையில், அவர் பொதுச் செயலாளராக்கப்பட்டார். நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்தத் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் குமரவேலுக்கு ஒதுக்கப்படவில்லை. தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார் 

விலகல் குறித்து அவர் கூறுகையில், ’’தேர்தல் நேரத்தில் குளறுபடிகள் நிறைய நடந்தது. சந்தோஷ் பாபு, மகேந்திரன், நான் என பலரும் ஒரு கட்சியில் இருந்து விலகுகிறோம் என்றால் அதன் காரணம் வலுவாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். 233 தொகுதிகளில் தோற்றால் பரவாயில்லை. ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்று ஒரு தலைவர் நினைத்ததால், தலைவர் என்ற பொறுப்பை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு நல்ல அரசியல் வேண்டும், அதை கமல்ஹாசன் செய்வார் என்று எதிர்பார்த்து வந்தோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. கட்சி தலைமை சரி கிடையாது. தேர்தலுக்காக பிரச்சார அலுவலகம் என்ற ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் திடீரென, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் முடிவுகளை செயல்படுத்துவதற்கு எங்களைப் பயன்படுத்தினார்கள். அது வருத்தமாக இருந்தது.

தேர்தல் நேரத்தில் இது பற்றி பேச வேண்டாம் என்று சும்மா இருந்தோம். தேர்தல் முடிந்ததும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தவறுகள் பற்றி எடுத்துச் சொன்னேன். ஆனால் அதன்பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. 2019ம் ஆண்டு நான் கட்சியை விட்டு வெளியேறியபோது நான் மூன்றாவது கட்ட இடத்தில் இருந்தேன். எனக்கு கமல்ஹாசனுடன் எந்த ஆதங்கமும் அப்போது கிடையாது. அவருடன் நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்தான் அப்போது இருந்தது. ஆனால் நான் இப்போது முதல்கட்ட நிர்வாகியாக இருக்கிறேன். எனவே, கமல்ஹாசன்தான் இந்த மோசமான முடிவுகளுக்கு காரணம் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனால்தான் கட்சியை விட்டு வெளியேறுகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!