மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மகளிருக்கு இலவச பேருந்து
மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை திமுக அரசு குறைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தற்போது நடைபெற்று வரும் விடியா தி.மு.க ஆட்சியைப் போல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ஒரு துக்ளக் தர்பார் ஆட்சியை நம் நாடும் கண்டதில்லை; நம் மாநிலமும் கண்டதில்லை. நிலையற்ற மனநிலையில் காலையில் ஒரு உத்தரவு பிறப்பிப்பதும், மாலையில் அதனை மாற்றியமைப்பதும் என்று சடுகுடு ஆட்டம் காட்டுகிறார்கள். அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி மகளிரை ஓசியில் பயணம் செய்பவர்கள் என்று பொருள்படும்படி கேலி பேசினார்.
கிராமப்புற பேருந்துகள் நிறுத்தும்
போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்காக இயங்கி வரும் ஒரு சேவைத் துறை. நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்ட அரசு நிதியை வழங்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியாக பல கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசு பேருந்துத் துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை ஒரு புதிய பேருந்தைக் கூட இந்த விடியா திமுக அரசு வாங்கவில்லை. இதுதான் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா அரசின் சாதனை.
நள்ளிரவு காத்திருந்த மக்கள்
கடந்த 29.4.2023 சனிக் கிழமை அன்று, அனைத்து ஊடகங்களும் தமிழகத்தின் தலைநகராம் சென்னை கோயம்பேட்டில், சென்னையில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக பெருமளவு மக்கள் பேருந்துக்காக விடிய விடிய காத்திருந்ததையும், கைக் குழந்தை மற்றும் வயதானவர்களுடன் எந்தவிதமான அடிப்படை வசதியும் இன்றி இரவு முழுவதும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே ஏப்ரல் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் இரவு தங்கியதையும் நேரடியாக ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஊடகங்களைப் பார்த்தாவது இந்நிகழ்வை தெரிந்துகொண்டாரா என்பதும் தெரியவில்லை.
புதிய பேருந்துகள் வாங்கவில்லை
இந்நிலையில், 3.5.2023 அன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளிப்படையாகவே, மகளிரின் இலவச பயணத்தால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, தமிழகத்தில் பொரும்பாலான கிராமப் புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், ஏற்கெனவே சென்னையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் என்று கூறிய இந்த விடியா அரசு,
தற்போது ஒட்டுநர்கள் குறைவாக உள்ளனர்; எனவே, நடத்துநர்களுக்கு வேலையில்லை என்று கடந்த சில நாட்களாக அரசு நடத்துநர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்நிலையைப் பார்க்கும்போது, பேருந்து சேவையை தனியாருக்கு தாரை வார்க்க இது போன்ற சித்து விளையாட்டுகளில் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
பேருந்து சேவை அதிகரியுங்கள்
போக்குவரத்துத் துறை என்பது ஒரு சேவைத் துறை. இதில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக, ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு இந்த விடியா அரசு செயல்பட்டால், அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
விரைவில் நாடாளுமன்ற தேர்தல்..! ராஜினாமா முடிவு கைவிடுங்கள்- சரத்பவாருக்கு ஸ்டாலின் கோரிக்கை