அதிமுக பொதுச்செயலாளர் யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் பதில் சொல்லியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முட்டுக்கட்டை பல்வேறு விதங்களில் போட திட்டமிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்து நிறைவேற்றியது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ. பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும், தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் உடனடியாக முறையீடு செய்தனர். அந்த மனுக்களை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ் பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதியும் தாக்கல் செய்துள்ள மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கட்சி விதிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..பாஜக நிர்வாகிகளை கூண்டோடு தூக்கிய அண்ணாமலை.. கமலாலயத்தில் புது உள்குத்து !!
மேலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்ளான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ மற்றும் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் இன்று காலை மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர்கள் கவுதம்குமார், பாலமுருகன் ஆகியோர் ஐகோர்ட்டில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளனர். இது, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் 39வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து வருவது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இது இப்படியிருக்க எடப்பாடி பழனிசாமி தரப்போ பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி. இனிமேல் ஒன்றும் பிரச்சனை இருக்காது என்று நினைத்திருந்தனர். ஆனால் ஓபிஎஸ் தரப்போ விடாமல் சட்ட போராட்டத்தை கையில் எடுத்து வருவதால், இபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் தவித்து வருகிறது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ