அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை அகற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு மீண்டும் முயன்று வருகிறது.
அதிமுக அதிகார மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி, மாறி நடைபெற்ற வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இருந்த போதும் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை உருவானது.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தநிலையில் டெல்லி நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து 10 நாட்களில் உரிய முடிவு எடுத்து அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தநிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகத்தில் உள்ளது. கட்சியை பலப்படுத்தும் வகையில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளது. முன்னதாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி சார்பாக அறிவிக்கப்பட்டது.
எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை
ஆனால் சபாநாயகர் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்காமல் மறுத்து வந்தார். இந்தநிலையில் தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து கடிதம் அனுப்பிய நிலையில், இந்த கடிதத்தோடு சபாநாயகரை மீண்டும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இருந்த போதும் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்றோடு நிறைவடைகிறது. எனவே எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை மாற்றம் என்பது உடனடியாக ஏற்பட வாய்ப்பு இல்லையென்றே கூறப்படுகிறது. அடுத்த சட்டமன்ற கூட்டம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கூடும் பொழுது ஓபிஎஸ்க்கு எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதா அல்லது பறிக்கப்பட்டுள்ளதா என தெரியவரும்.
இதையும் படியுங்கள்