எடப்பாடி பழனிச்சாமி ஆட்டம் ஓவர்.. பொது செயலாளர் ஆகவே முடியாது.. கொக்கரிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2022, 3:18 PM IST
Highlights

தற்போது வந்துள்ள இடைக்கால தடையால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை என அவரின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி கூறியுள்ளார்.

தற்போது வந்துள்ள இடைக்கால தடையால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை என அவரின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி கூறியுள்ளார். இதே நேர்த்தில் இனி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆவது சாத்தியமில்லாத ஒன்று என முன்னாள் எம்.பி கேசி பழனிச்சாமி, மற்றும் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் கூறியுள்ளனர்.முழு விவரம் பின்வருமாறு:-

ஜெ. மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், இபிஎஸ் தரப்பிலிருந்து ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்தது. அன்று முதல் ஓபிஎஸ்- இபிஎஸ் இருதரப்புக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், இபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் போன்றோர் மட்டுமே ஓபிஎஸ் அணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. அதில் ஓபிஎஸ்சும் கலந்து கொண்டார். 

ஆனால் அங்கு ஓபிஎஸ் அவமரியாதை செய்யப்பட்டதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறினார். அதன்பின்னர் அப்பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை அடுத்து ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்குழு கூடியது. அதில் அவர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பின்னர் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் சென்னை உயிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என  நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.  

பின்னர் இத்தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், இந்த  வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தரம் அமர்வு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என அறிவித்தது.  இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், இதற்கிடையில் இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முயன்று வந்தார். இந்நிலையில்தான் ஓபிஎஸ் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

இதையும் படியுங்கள்: கொஞ்சம் கூட கோபம் குறையாத முதல்வர் ஸ்டாலின்.. ஒரம் கட்டப்படும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன்..!

அப்போது அதிமுக  பொதுக்குழு கூட்டப்ட்டதே முறைகேடானது என்றும், ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் தான் அனைத்து பதவிகளையும் நியமிக்க முடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது, இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை  விதித்து உத்தரவிட்டது, எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு ஏன் இவ்வளவு அவசரம் என  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கை தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என்றும் இதற்கு இபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். 

இதையும் படியுங்கள்: மிஸ்டர் எடப்பாடி... "இனி நாங்க ஜீரோ இல்ல ஹீரோ"... இபிஎஸ்சை எகிறி அடித்த வைத்திலிங்கம்.

கே.பி முனுசாமி:

தற்போது வந்துள்ள தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறதே தவிர எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச் செயலாளர் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 4 மாத காலத்திற்குள் நிரந்தர பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதன் அடிப்படையில்தான் நாங்கள் இந்த வாதத்தை முன்வைத்து இருக்கிறோமே தவிர,  இதில் அவசியமோ, அவசரமோ காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

பெங்களூரு புகழேந்தி: ( ஓபிஎஸ் ஆதரவாளர்) 

இந்த தீர்ப்பு மிகத் தெளிவாக வந்திருக்கிறது, இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதகமான தீர்ப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  தன்னைத் தானே பொதுச் செயலாளர் அவர் அறிவித்துக் கொண்டு, இல்லாத ஒன்றை உருவாக்கி வந்த நிலையில் இப்போது உச்சநீதிமன்றமே, பொதுச் செயலாளர் பதிவிக்கு என்ன அவசரம் என கேள்வி எழுப்பி உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய பின்னடைவு மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் அவர் இனி பொதுச்செயலாளர் ஆக முடியாது என்பதைதான் இது காட்டுகிறது. எந்த உண்மையையும் அவர் மறைத்து இங்கு பொதுச்செயலாளர் ஆகவே முடியாது. 

கே.சி பழனிச்சாமி (அதிமுக முன்னாள் எம்.பி)

எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் உச்சநீதிமன்றத்தில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பது தான் இந்த இடைக்கால உத்தரவு காட்டுகிறது. ஏற்கனவே சிவசேனா வழக்கை இதே நீதிபதிகள்தான் விசாரித்தார்கள் அவர்கள் அனைத்தையும் விசாரித்துவிட்டு தேர்தல் ஆணையம் இதுகுறித்து முடிவு எடுக்கட்டும் என விட்டுவிட்டார்கள். இன்றைய உத்தரவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதகமான ஒரு உத்தரவுதான். இது தொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடக்கும் போது அவருக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

click me!