பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின்..! திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம்- இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jan 16, 2023, 12:20 PM IST
Highlights

 நிர்வாக திறனற்ற ஆட்சி நடத்தி வரும் திமுக-வின் தலைவர்  மு.க. ஸ்டாலின் முதலமைச்சர், அவரது மகன்  உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்று ஆளாளுக்கு தமிழக அரசை கூறு போட்டுக்கொண்டு அரசை நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 

எம்ஜிஆர் பிறந்தநாள்

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  அதில், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 106-வது பிறந்த நாள்... அதுவே நமக்கு சிறந்த நாள், அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பொன்னாள் மற்றும் அதுவே நமக்கு நன்னாள். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த நன்னாளில், நான் உங்களோடு பேசுவதற்கு ஒரு அரிய வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது. அதுவே மடலாக உங்களுக்கு எழுதுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

இபிஎஸ்- ஓபிஎஸ் ஐ விமர்சித்த மாஜி அமைச்சர் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்..! அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தைத் தொடங்கி, அதன் தலைவராக, மக்களின் பேராதரவைப் பெற்று, மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக நல்லாட்சியை வழங்கினார். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டம், தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம், திராவிட இயக்கம் கண்ட கனவுக்கிணங்க பெயர்களுக்குப் பிறகு இருந்த சாதிப் பெயர்கள் நீக்கம், விவசாயிகளின் துயர் துடைக்க இலவச மின்சாரம், நெசவாளிகளின் துயர் துடைக்க வேட்டி, சேலைகளை தயாரிக்கச் செய்து அதை பாமர மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியது, குடிசைகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், கிராமப்புறங்களில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நிலவி வந்த பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த கிராம முன்சிப் பதவிகளை ஒழித்து, நிர்வாக அமைப்பை மாற்றியமைத்ததும் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்தான் நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை..! தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்ற இபிஎஸ்-ஓபிஎஸ்..! யார் யார் பங்கேற்கிறார்கள்..?

1972-ஆம் ஆண்டில் மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த தீயசக்தியான திரு. கருணாநிதி அவர்கள் இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமுல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமுல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். 

அவருடைய காலத்தில் பாமர மக்களுக்கு இன்னல்கள் ஏற்படாத வண்ணம் வீட்டு வரி, குடிநீர் வரி, பேருந்து கட்டணம் ஆகியவற்றை உயர்த்தாமல், மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்கினார். இன்றைய திமுக ஸ்டாலின் அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது. இன்றைய, நிர்வாக திறனற்ற ஆட்சி நடத்தி வரும் திமுக-வின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் முதலமைச்சர், அவரது மகன் திரு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்று ஆளாளுக்கு தமிழக அரசை கூறு போட்டுக்கொண்டு விடியா அரசை நடத்துகின்றனர்.

எனவே, இந்த மக்கள் விரோத இந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீரசபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

திருவள்ளுவருக்கு நெற்றியில் விபூதி பட்டை, காவி உடை.! வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்
 

click me!