ஆ ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.. இது தான் அவருக்கான தண்டனை- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Feb 9, 2024, 1:29 PM IST

அதிமுக ஆட்சி காலத்தில்  கொண்டு வந்த திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் 8 மாதம் ஆகிறது இவர்கள் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள் என எடப்பாடி பழனிசாமி  கேள்வி  எழுப்பினார். 


அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை விமர்சித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து அதிமுக சார்பாக அவிநாசியில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் அவர்கள் தெய்வப்பிறவி, அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அது எம்ஜிஆர் அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னார் அது இப்போது நடந்து கொண்டிருக்கின்றது ஆ.ராசாவின் இந்த பேச்சால் எம்ஜிஆரின் தொண்டன் மனது எப்படி காயப்பட்டிருக்கும். திட்டமிட்டு பேசும் ராஜாவுக்கு நாவடக்கம் தேவை, வீட்டிற்கு அடங்காத பிள்ளையை ஊரில் வடக்கு வாருங்கள் மக்கள் வெகுண்டு எழுந்தால் ராஜாவால் தாங்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். 

Tap to resize

Latest Videos

கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் செய்த ராஜா தான் இவ்வாறு பேசுகிறார்.  அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. உயர்கல்வியில் 2030ல் அடைய வேண்டிய இலக்கை 2019 லேயே அடைந்தோம். உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம் என்று பெயர் பெற்றோம். 11 மருத்துவ கல்லூரி தந்தோம். 7  சட்டக்கல்லூரி, கால்நடை ஆராய்ச்சி மையம், கால்நடை ஆராய்ச்சி பூங்கா தந்தோம், தமிழக முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தந்தோம் என அதிமுக ஆட்சி கால திட்டங்களை பட்டியலிட்டார்.   அதிமுக ஆட்சி காலத்தில்  கொண்டு வந்த திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் 8 மாதம் ஆகிறது இவர்கள் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள் என கேள்வி எழுப்பியவர்,  ஸ்டிக்கர் ஒட்டி திறப்பது தான் இவர்களின் திட்டம் என விமர்சித்தார்.  

திருப்பூர் பகுதியில் விசைத்தறிகள் நிறைந்த பகுதி, கடுமையான மின் கட்டணம் உயர்வால் இந்த தொழில்துறைகள் படு பாதாளத்திற்கு சென்று விட்டனர். மின் கட்டணத்தை குறைக்க போராட்டம் நடத்துகின்றனர் ஆனால் திமுக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.  லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். இன்றைய முதலமைச்சர் ஸ்பெயின் நாட்டிற்கு  சென்றார். அங்கு மூன்று நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்தி அந்த மூன்று நிறுவனங்களும் தமிழகத்தைச் சேர்ந்தவை. சென்னை மற்றும் திருச்சியில் உள்ளது.  தூத்துக்குடி மற்றும் பெருந்துறையில் உள்ள இந்த நிறுவனங்களிடம் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். இவர் தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை தொழில் முதலீடு செய்ய சென்றுள்ளார் என மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.  

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை பாலியல் வன்கொடுமை,  தனியாக வசிக்கும் முதியோர்களை தாக்கி கொள்ளையடிக்கின்றனர் பலர் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர்.  அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினார்கள். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வந்தோம். வேறு வழி இல்லாமல் வழங்க வேண்டிய நிலைக்கு வந்தார்கள். ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மூன்றில் ஒரு பகுதி தான் வழங்கி உள்ளனர். ஆட்சிக்கு முன்பு ஒரு பேச்சுக்கு பின்னர் ஒரு பேச்சு இதுதான் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என விமர்சித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆ ராசா இந்த தொகுதியில் போட்டியிடுவார். எம்ஜிஆரை அவதூறாக பேசிய அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்ஜிஆரை விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என உணர்த்த வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதியில் மிகப்பெரிய வெற்றி குவிக்க பாடுபட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
 

click me!