#BREAKING அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு... இன்னும் சற்று நேரத்தில் அமித் ஷாவுடன் ஈபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 28, 2021, 7:52 PM IST
Highlights

சுமார் 15 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையில் பாஜக 35 முதல் 40 தொகுதிகள் வரை கேட்டதாகவும், ஆனால் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 அல்லது 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற  தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை என தீயாய் வேலை செய்து வருகின்றன. திமுக - காங்கிரஸ் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது இல்லத்தில் அவர்களை தனித்தனியே சந்தித்து, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி உள்ளிட்டோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

சுமார் 15 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையில் பாஜக 35 முதல் 40 தொகுதிகள் வரை கேட்டதாகவும், ஆனால் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 அல்லது 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது ஒருபுறமிருக்க தென் மாவட்டங்களில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் இன்று காரைக்கால், விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் வந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக்கூறப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இன்று இரவு 8.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 
 

click me!