எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் செய்ததை மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் செய்கிறாரோ..?

Published : Jun 04, 2021, 10:19 PM IST
எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் செய்ததை மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் செய்கிறாரோ..?

சுருக்கம்

திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் வைக்கும் கோரிக்கைகளை, முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு உடனடியாக நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், தன்னுடைய சொல்படி செயல்படும் அரசு என்ற ஒரு தோற்றத்தை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி அரசு திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு, அதுபற்றி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவார். அந்த திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கும்போது, தமிழக அரசை இயக்கும் ஸ்டாலின் என்று திமுகவினர் மகிழ்ந்து அதை உத்தியாகப் பயன்படுத்தினர். தேர்தல் பிரசாரத்துக்கும் இதை திமுக பயன்படுத்தியது.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று மு.க. ஸ்டாலினும் முதல்வராகிவிட்டார். அண்மைக் காலமாக மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு முன்பாக, அதைப் பற்றி கோரிக்கையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையாகவோ அல்லது ட்விட்டரிலோ பதிவிடுகிறார். அந்த அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்ட பிறகு, அதற்கு நன்றி தெரிவிப்பதையும் ஓபிஎஸ் வழக்கமாகக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.


தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த  குழந்தைகளைக் காக்க பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த ஓபிஎஸ்,  “கொரோனா தொற்று காரணமாகப் பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக முதல்வரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட தமிழக முதல்வருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இதேபோல ஓரிறு நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களுக்கான தொகையை வழங்கினார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ஓ.பன்னீர்செல்வம், “தேர்தல் முடிந்த தற்போதைய நிலையில், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக  ஓய்வூதிய பலன்களை வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 31-5-2021 நாளிட்ட எனது அறிக்கையின் வாயிலாக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.எனது வேண்டுகோளினை ஏற்று, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை 2-6-2021 அன்று நிறைவேற்றியிருக்கிற முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி அரசில் மு.க.ஸ்டாலின் பின்பற்றிய அதே உத்தியை மு.க. ஸ்டாலின் அரசுக்கு எதிராக ஓபிஎஸ் பின்பற்றுகிறாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!