
2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து தற்போதே பணிகளை துவக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும் எதிர்கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அரசியல் களத்தில மு.க.ஸ்டாலினுக்கு நேர் எதிர் நிற்பவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தேர்தலில் வெற்றி உறுதி என்று நம்பியிருந்த நிலையில் தோல்வி கிடைத்த நிலையில் அது குறித்து தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதே சமயம் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக தவறாமல் ட்விட்டர் மூலம் தனது கருத்துகளையும் அவர் பதிவிட்டு வருகிறார். ஆனால் இதுநாள் வரை செய்தியாளர்களை சந்திக்காமல் எடப்பாடி பழனிசாமி தவிர்த்து வருகிறார்.
மறுபடியும் தேர்தலில் வெல்ல முடியாத நிலையில் எதிர்கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி ஒரு திருப்திகரமான செயலாகவே கருதுவதாக கூறுகிறார்கள். அதிமுகவை முழுமையாக கைப்பற்றுவது, ஒரு மக்கள் தலைவராக உருவெடுப்பது என இரண்டு வாய்ப்புகள் தற்போது அவர் முன் உள்ளது. இதனை எப்படி அடைவது என்பது தான் எடப்பாடி பழனிசாமி முன் உள்ள சவால்கள். கடந்த தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெறும் என்று கூறிக் கொண்டிருந்தவர்களுக்கு அதிமுக உண்மையில் தண்ணி காட்டியது. கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் திமுகவால் அதிமுகவை பெரிய அளவில் வெற்றி கொள்ள முடியவில்லை.
இவற்றுக்கு எல்லாம் காரணம் எடப்பாடியாரின் வியூகம் தான் காரணம் என்கிறார்கள். அந்த வியூகங்களை உருவாக்கிக் கொடுத்தவர்களைத்தான் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருவதாக சொல்கிறார்கள். மேலும் தேர்தல் வரை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த சுனில் டீமுடனும் எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுபடியும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள். அடுத்த தேர்தல் வரை காத்திருக்காமல் தற்போது முதலே தேர்தலுக்கான பணிகளை துவங்க எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இதன் அடிப்படையில் சுனில் டீம் மட்டும் அல்லாமல் கடந்த முறை முதலமைச்சராக இருந்த போது அவருக்கு வழிகாட்டிய அதிகாரிகளையும் எடப்பாடி அழைத்து பேசியுள்ளார்.
இந்த பேச்சுகளின் முடிவில் சுனில் டீம் மறுபடியும் எடப்பாடி பழனிசாமிக்காக வேலை பார்க்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் பணி துவங்கும் என்று கூறுகிறார்கள். இதே போல் கடந்த ஆட்சியின் போது அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்களும எடப்பாடி பழனிசாமியுடன் இணைய முன்வந்துள்ளதாக கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இந்த கொரோனா அலை ஓய்ந்த பிறகு மிகப்பெரிய திட்டத்துடன் மக்களை சந்திப்பார் என்கிறார்கள்.