திமுக மாவட்டச் செயலாளர்கள் களையெடுப்பு.. மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி..!

By Selva KathirFirst Published May 17, 2021, 10:46 AM IST
Highlights

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசை வழி நடத்தி வரும் அதே வேளையில் கட்சியிலும் முக்கிய சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதை மு.க.ஸ்டாலின் உணர்ந்தே இருக்கிறார். 

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசை வழி நடத்தி வரும் அதே வேளையில் கட்சியிலும் முக்கிய சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதை மு.க.ஸ்டாலின் உணர்ந்தே இருக்கிறார். 

சட்டமன்ற தேர்தலில் பெறும் வெற்றி என்பது தன்னை ஒரு மிகப்பெரிய தலைவராக உருவகப்படுத்தும் வகையில் இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் திடமாக நம்பி வந்தார். தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றே பிரச்சாரம் செய்தார். இதே போல் திமுக தலைமையும் திமுக மிக எளிதாக 200 இடங்களைத்தாண்டி வெற்றி பெறும் என்று நம்பி வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தது. மிகவும் போராடியே பல்வேறு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் நிலை இருந்தது. வெற்றி எளிதாக கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் முடிவுகள் ஒரு பக்கத்தில் பெருத்த ஏமாற்றம் என்றே கூட சொல்லலாம்.

ஏனென்றால் எதிர் அணி பலவீனமான அணி என்றே திமுக புரஜெக்ட் செய்து வந்தது.  இது தவிர பிரசாந்த் கிஷோருக்கு வேறு 380 கோடி ரூபாய் கொடுத்து தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியிருந்தது திமுக. இப்படி பல்வேறு விஷயங்கள் சாதகமாக இருந்தும் திமுகவால் அதிமுகவை படு தோல்வி அடையச் செய்ய முடியவில்லை. சில தொகுதிகளில் வெறும் 50, 500 வாக்குகளில் திமுகவேட்பாளர்கள் வெற்றி பெற்று இருந்தனர். இது ஒரு புறம் இருந்தால் கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக படு தோல்வி அடைந்திருந்தது. இத்தனைக்கும் கோவை தவிர தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த தேர்தலில் திமுக கணிசமான தொகுதிகளை வென்று இருந்தது.

இதே போல் ஈரோடு, நாமக்கல், சேலம், நெல்லை, தென்காசி, மதுரை மாவட்டங்களிலும் அதிமுக எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டிருந்தது. இதற்கு காரணம் இந்த மாவட்டங்களில் எல்லாம் திமுகவின் தேர்தல் பணிகளில் இருந்த தொய்வு தான் என்கிறார்கள். தவிர அந்த மாவட்டங்களில் உள்ள அதிமுக பெருந்தலைகளை எதிர்த்து அரசியல் செய்யும் அளவிற்கு திமுகவில் சரியான ஆட்கள் இல்லை என்பதும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. அத்தோடு வேட்பாளர் தேர்விலும் மாவட்டச் செயலாளர்கள் திறம்பட செயல்படவில்லை என்று திமுக தலைமை நம்புகிறது.

இது தவிர முக்கிய அமைச்சர்களான எஸ்பிவேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரை தோற்கடிக்க திமுக பிரம்மபகீரதம் செய்தது. ஆனால் அவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. இதே போல் செங்கோட்டையன், கருப்பணன், செல்லூர் ராஜூ, ஓபிஎஸ் போன்றோர் மிக எளிதாக வெற்றி பெற்று இருந்தனர். இதற்கும் திமுகவின் களப்பணியில் இருந்த தொய்வே காரணம் என்கிறார்கள். எனவே இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு கட்சியில் சில மாற்றங்களை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். தற்போது முதற்கட்டமாக திமுக படு தோல்வியை சந்தித்த மாவட்டங்களில் பட்டியல் தயாராகி வருகிறது.

மேலும் அந்த மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர்கள் தொகுதியில் திமுக நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்றினர் என்பது குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தவறு செய்த திமுக நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என்கிறார்கள். இதே போல் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட திமுக செயலாளர்களும் மாற்றப்பட உள்ளனர் என்கிறது அறிவாலய வட்டாரம்.

இதே போல் அமைச்சர்கள் தொகுதியில் பொறுப்பாளர்களாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அங்கு திமுகதோல்விக்கு காரணம் யார் என்பதை உறுதி செய்து அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

click me!