மதுரைக்கு தேவையாக ஆக்சிஜன் விநியோகிக்க தனியார் ஆலைகளுக்கு கோரிக்கை. சுற்றிச் சுழலும் அமைச்சர்கள்.

By Ezhilarasan BabuFirst Published May 17, 2021, 9:59 AM IST
Highlights

மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், கொரோனா சிகிச்சைக்கு என புதிதாக 500 படுக்கைகளை கூடுதலாக அமைக்கும் பணி இன்று முதல் துரிதமாக நடைபெற்று வருகிறது.  

மதுரையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தனியார் ஆலை நிர்வாகத்தினரிடம் மதுரையின் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி கூறியிள்ளார்.

மேலும் மதுரையைப் பொறுத்த வரை, கொரோனா தடுப்புப் பணியில் அரசு இயந்திரம் முழு வீச்சில் முடுக்கிவிடப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மதுரை கப்பலூரில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைப் பார்வையிட்ட தமிழக வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. மதுரையைப் பொறுத்த வரை 55 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய சவாலாக உள்ளது. கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து கொண்டிருந்த ஆக்சிஜனும் தடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனும் கிடைக்க சில நாட்கள் ஆகும், எனவே மதுரை கப்பலூர் சிப்காட்டில் உள்ள அரசன் மற்றும் மேலூர் அருகே தெற்கு தெரு ஊராட்சியில் உள்ள கல்யாணி ஆகிய இரு தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைப் பார்வையிட்டு, அவற்றின் நிர்வாகத்தினரிடம் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி கேட்டுள்ளேன். மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த இரு நிறுவனங்களும் அதிக ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவர்களும் சம்மதித்துள்ளார்கள். தமிழக முதல்வரும் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்து உள்ளார்கள். 

கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். தேவையின்றி நகர்க்குள் வருவது, வாகனங்களில் ஊர் சுற்றுவது போன்றவற்றை தவிர்த்து, சுயக் கட்டுபாட்டுடன் இருந்து, வீடுகளை விட்டு வெளியே வராமல், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் அரசின் பணிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்க்கு உரிய சிகிச்சைக் கிடைக்கவும், பிறரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும் போர்க்கால அடிப்படையில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கடந்த இரு நாட்களாக அரசு இயந்திரத்தையும், சம்பந்தப்பட்ட பிற நிர்வாகத்தினரையும் முடுக்கி விட்டு மதுரையில் பணிகளை மேற்கொண்டு உள்ளோம்.

மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், கொரோனா சிகிச்சைக்கு என புதிதாக 500 படுக்கைகளை கூடுதலாக அமைக்கும் பணி இன்று முதல் துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். மதுரை மாநகராட்சியில் இன்று முதல் 8 வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கபசுர குடிநீர் வழங்கும் பணி கிராமப்புறங்களில் வேகப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன், சிகிச்சை எடுத்துக் கொள்ள மதுரை யாதவர் மகளிர் கல்லூரியில் சித்தா மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் 4 இடங்களில் கூடுதலாக சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் ஆரம்பிக்க உள்ளோம் என அமைச்சர் பி. மூர்த்தி கூறினார்.  

 

click me!