
சரக்குவரி மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு காரணமாக பல்வேறு தாக்கங்கள் உருவாகி வருகிறது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலர் ஜி.எஸ்.டி.யால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறி வருகின்றனர்.
புதிய வரி விதிப்பு காரணமாக, ஓட்டல்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளில் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, ஜி.எஸ்.டி.யால் தமிழகத்துக்கு பாதிப்பு வராது என்று கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பொன்னேரிக்கரையில் முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்றார்.
அதேபோல், ஜி.எஸ்.டி. வரியால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களை பாதிக்காது என்று கூறினார். அப்படி பாதிப்பு வரும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. வரியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார்.