அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரும் 26-ம் தேதி சந்திக்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என்று தனிநீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க;- உண்மையான அதிமுக நாங்க தான்.. ஓபிஎஸ் மனுவை எதுக்கு ஏத்துக்கிட்டீங்க.. எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் கடிதம்!
இதனை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் மனுதாக்கல் செய்தார். ஆனால், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து, இபிஎஸ் தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் உத்தரவிட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- எடப்பாடி அணிக்கு தாவிய முக்கிய புள்ளி..காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.!
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரும் 26ம் தேதி டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இடையே கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புள்ளது.