
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடியுடன் பெரம்பலூர் மாவட்ட எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் எடப்பாடிக்கு அடுத்த கட்ட நெருக்கடி உருவாகுமா என்ற கேள்வி எழுத்துள்ளது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து எடப்பாடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை காப்பாற்றி கொள்ள எடப்பாடி மிகவும் தட்டு தடுமாறுகிறார்.
பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு நெருக்கடிகள் குவிந்த வண்ணம் உள்ளன. போதாத குறைக்கு அவர் தரப்பில் இருந்தே நெருக்கடிகள் முட்டி மோதிக்கொண்டு அவரை திணறடித்து வருகிறது.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைத்திருந்தபோது பல எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். ஆனால் எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும், ஒ.பி.எஸ்சை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி தெளித்து எம்.எல்.ஏக்களை சமாதான படுத்தியுள்ளார்.
அதேபோல் எம்.எல்.ஏக்கள் ஒத்துழைக்க ஆட்சியையும் பிடித்து விட்டார் எடப்பாடி. ஆனால் தற்போது அந்த எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 8 எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து சென்றனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி சில அமைச்சரகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்ட எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் முதல்வரை சந்தித்துள்ளார்.
இதனால் முதலமைச்சர் எடப்பாடிக்கு புதிய தலைவலி ஆரம்பிக்குமோ என்ற கேள்வி எழும்பியுள்ளது.
இவரும் சில நாட்களுக்கு முன்பு தலித் எம்.எல்.ஏக்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.