
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி 2017 – 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். ஆனால் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 16-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, 17-ஆம் தேதி ஜிஎஸ்டி சட்ட முன்வடிவு மசோதா நிறைவேற்றப்பட்டது.
நேற்று புதுச்சேரி சட்டப் பேரவை மீண்டும் கூடியது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எம்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் அனந்த், ஆளுநர் கிரண் பேடியை மிகவும் புகழ்ந்து பேசினார். இதனால் நேற்று சட்டப் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் பேனர்களை ஏந்தி சபாநாயக்ர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும் அமளியில் ஈடுபட்டார்.
ஆனாலும் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையை வாசித்ததால் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.