ஸ்டாலின்... ஓபிஎஸ்... கவர்னர்- லெப்டில் வாங்கி ரைட்டில் அடிக்கும் எடப்பாடி!!

By sathish kFirst Published Oct 13, 2018, 12:00 PM IST
Highlights

ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் தொடங்கிய பிறகு நடைபெற்ற கூவத்தூர் கூத்துக்கள் அனைவரும் அறிந்ததே. கூவத்தூர் கூத்தின் ரிசல்டுதான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என்று அறிவிப்பு.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற நாள்முதலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஆட்சி கவிழ்ந்துவிடும் என அறிக்கை விட்டுவிட்டே மண்டை காய்ந்து போயினர் எதிர்கட்சியினர். ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் என செஞ்சுரி அடித்து தொடர்ந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஜெயலலிதா, கருணாநிதி எனும் மிகப்பெரிய ஆளுமைகளுக்கு மட்டுமே சாத்தியம் என நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு கிலோ கணக்கில் அல்வா கொடுத்துவிட்டார் எடப்பாடி என்றே சொல்லலாம். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் தொடர்ந்து இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், விரைவில் தேர்தல் வந்துவிடும் என உறுதியாக நம்பி கிட்டதட்ட 10 மாதங்களுக்கு முன்பே தங்களுடைய தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். ஆனால், தற்போது அந்த வேலைகளுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. 

எந்த வகையிலாவது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நம்பியிருந்த அவர்களுக்கு எடப்பாடியின் ஒவ்வொரு சாதுரியமான மூவ்களால் ஆளும் அதிமுக அரசு, ஸ்டடியாக சென்று கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் நடந்த மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்வோ முடியாது. இன்னும் சொல்லப்போனால் கடப்பாறையை விட்டு நெம்பினால்கூட ஒன்றும் அசைக்க முடியாது என்ற மிகப்பெரிய உண்மையை அப்போதே தெரிவித்திருந்தார்.

தமிழக அரசியல் நிலவரத்தை நன்கு அறிந்திருந்த பலருக்கும் இந்த கடப்பாறை வார்த்தையின் உண்மைத் தன்மை நன்றாக புரிந்திருந்தது. ஏனென்றால், அந்த அளவிற்கு எதிர்கட்சிகள் மற்றும் அதிமுக துரோகிகளின் எண்ணம் ஈடேறாது என்பதை உறுதியாக நம்பியதோடு, ஆட்சியை தக்கவைக்கும் வேலைகளில் மிகத் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு அடித்தனர் எடப்பாடி அன்ட் கோ. இந்த வகையில், ஸ்டாலினை க்ளீன் போல்டு ஆக்கினார் எடப்பாடி. யாரை ராஜ குருவாக நம்பி இருந்தனரோ, அவரது மிக நெருங்கிய உறவினரான டிடிவி தினகரனுக்கே அடுத்த அல்வா கொடுத்தார் எடப்பாடி. 

தினகரனின் மற்றும் குடும்பத்தினர் அடாவடிப் பேச்சுக்களால் நொந்து நூடுல்ஸ் ஆகி தர்மயுத்தம் நடத்தாமல் மிகச் சாதுரியமாக இவரையும் ஹாண்டில் செய்தனர். டிடிவி தினகரனைப் பொறுத்தவரை 18 எம்.எல்.ஏ.க்கள் எனும் துருப்புச்சீட்டை வைத்து, மிக வேகவேகமாக காய்களை நகர்த்தினார். ஸ்டாலினால் முடிகிறதோ இல்லையோ, டிடிவியால் நிச்சயம் ஆட்சி கவிழும் என பலரும் நம்பினர்.

கடைசியில் அவர்களுக்கும் கிடைத்தது என்னவோ அல்வாதான். அந்த அல்வாவிற்கு பின்னால், எடப்பாடியின் அன் கோவின் ராஜதந்திர வேலைகள் இருப்பதுதான் உண்மை. தனது சட்ட குழுவை வைத்து திறமையாக செயல்பட்டு இரு வேறுமாதிரியான தீர்ப்புகளைப் பெற்றனர். 

இதுவே எடப்பாடி அண்ட் டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தால் அப்போதே ஆட்சி கலைந்திருக்கும். அரசியலில் கொட்டைப்போட்ட மிகப்பெரிய மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களே, இவ்வளவு சாதுரியமாக இருப்பார்களா என்பதே கேள்விக்குரிதான்.

இது மட்டுமின்றி, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதிலும், சட்ட அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி தொடர் முயற்சிகளை எடுத்து, சொல்லி வைத்தாற்போல் இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணி பெற்றது. இதுவும் கலைந்து சென்று கொண்டிருந்த கட்சி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஓரளவுக்கு எடப்பாடி பக்கமே நிற்கும் வகையில் கட்டிப்போட்டது.

அதேபோன்று கவர்னர் தரப்பை பொறுத்தவரை மிகப்பெரிய மோதல்போக்கை கடைப்பிடிக்காமல், கவர்னரின் சில தேவையற்ற தலையீடுகளை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி சரியான லாபி செய்து, அவரையும் வழிக்கு கொண்டு வந்தனர்.

ஆக மொத்தத்தில் அரசியலில் கொட்டைப்போட்டு, பி.எச்.டி பெற்ற தலைவர்களைக் கொண்ட திமுகவும் சரி, தனது பிரஸ்மீட்டுகளில் 100 மார்க்குகளை அடிக்கும் டிடிவி தினகரனையும் சரி, சிலபல காரணங்களுக்காக செக் வைக்கும் மத்திய அரசு கவர்னரைக இருந்தாலும் சரி அனைவரையும் லெப்டில் வாங்கி ரைட்டில் அடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பதே உண்மை. இதற்கெல்லாம் சான்றாக எடப்பாடி பழனிச்சாமி, முதல்முறையாக பிரதமரை சந்திப்பதற்கும், தற்போது பிரதமரை சந்திப்பதற்கும் உள்ள பாடி லாங்குவேஜே சாட்சி...!

click me!