
சேகர் ரெட்டியின் டைரி குறிப்பு என்பது, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஆட்டி படைக்க, தமக்கு கிடைத்த மந்திரக்கோலாக கருதுகிறது மத்திய அரசு.
டைரியில் இருந்த ஒரு சிலரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்த, வருமான வரித்துறையினர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த டைரி குறிப்பில், அதிமுகவினர் மட்டும் அல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சி தவிர, அனைத்து கட்சிகள் மற்றும் ஜாதி சங்கங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த டைரியை துருப்பு சீட்டாக பயன்படுத்தியே, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடியை ஏற்கனவே மிரட்டிய மத்திய அரசு, தமது கைப்பாவைகளாக மாற்றி வைத்துள்ளது.
அதன் காரணமாக, டெல்லிக்கு மிகவும் பணிந்த எடப்பாடி, தலைமை செயலகத்தில், மாநில சுயாட்சிக்கு எதிராக, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆலோசனை நடத்தும் அளவுக்கு இடம் கொடுத்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி சொல்வதை எல்லாம் கேட்கும் அளவுக்கும், அவர் நெருக்கமாக ஆகிவிட்டார். அதனால், மோடியிடம் பன்னீருக்கு இருந்த செல்வாக்கு குறைந்து விட்டதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
எடப்பாடி மீது, பன்னீர் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத டெல்லி மேலிடம், இரு அணிகளும், மோதல் போக்கை கைவிட்டு விட்டு இணக்கமாக செயல் படுங்கள் என்று ஒரே வார்த்தையில் உத்தரவு போட்டுள்ளதாம்.
இதனால், பன்னீர் கடும் அப்செட்டில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், பன்னீர் அணி, தம்மோடு இணைந்தாலும், முக்கிய பொறுப்புக்கள் எதுவும் வழங்க, எடப்பாடி தரப்பு தயாராக இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.
கடந்த நான்கு மாதங்களாக, சொந்த பணத்தை செலவு செய்து, அரசியல் நடத்தி வரும் பன்னீர், தமக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதால், கொஞ்சம் மனம் தளர்ந்து உள்ளதாகவே கூறப்படுகிறது.
டெல்லியை நம்பி களம் இறங்கிய தம்மை, டெல்லி கைவிட்டு விட்டதே என்றும் அவர் வருத்தத்தில் இருக்கிறாரார். எனினும் டெல்லிக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத நிலையும் அவருக்கு உள்ளது.
சேகர் ரெட்டி டைரி குறிப்பில் உள்ள சில பெயர்களைதானே, தமிழக அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம், மற்ற பெயர்களையும் தெரிவிக்க வேண்டுமா? என்றும் டெல்லி அவ்வப்போது அச்சுறுத்தி வருவதால், அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.
மறுபக்கம், மற்ற கட்சிகளில் உள்ளவர்கள், ஜாதி சங்க பிரமுகர்கள் ஆகியோரை, பணிய வைக்கவும், சேகர் ரெட்டி டைரி குறிப்பே போதும் என்று நினைக்கிறதாம் டெல்லி.
அதனால், குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த உடன், யார், யாருடைய பெயர்கள் எல்லாம் வெளி வரப்போகிறதோ என்று, தமிழக அரசியல் கட்சிகளும், ஜாதி சங்கங்களும் என்ற அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.