
அரசியல் அதிரடியில் ஜெயலலிதாவாகவே மாற முனையும் எடப்பாடி பழனிசாமி, தன் அரசுக்கு எதிரான துர் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தினகரன் அணியின் சேலம் மாவட்ட செயலாளருமான எஸ்.இ.வெங்கடாசலத்தை கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறார்.
சொந்த மாவட்டத்தில், சொந்த கட்சிக்காரனையே கைது செய்திருப்பதன் மூலம் எதிர்கட்சிகளுக்கு தனது ஆளுமையை நிரூபித்திருக்கிறார் எடப்பாடி என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார் என்று சேலம் அன்ந்தானப்பட்டி போலீஸார் கோடிட்டுக் காட்டும் அந்த நோட்டீஸில் அப்படி என்னதான் இருக்கிறது என்கிறீர்களா?...
அந்த துண்டு பிரசுரத்தில்ருக்கும் விஷயங்களின் ஹைலைட்ஸ் இதோ...
’இணைப்பு என்பது மேகங்கள் கூடி மழை பொழிவது போல இருக்க வேண்டும். காகங்கள் கூடி பங்கு போடுக் கொள்வதை போல இருக்கக்கூடாது.’ : - அறிஞர் அண்ணா.
’பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப்பற்றோ, ந்நாட்டுப்பற்றோ சிறிதளவும் காண முடியாது.’: - பெரியார். _ என்ற இந்த இரண்டு பொன் வாக்கியங்களுக்கு கீழேயும் சில சாட்டையடிகள் வரிசை கட்டுகின்றன. அதில் தினகரனை புகழ்ந்து கொண்டாடி இருக்கிறார்கள். சசிகலாவை ‘திராவிட தாய் சின்னம்மா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
* உன் பதவியில் நீ செய்த தப்புகளுக்காக டெல்லிக்கு நீ அடிமையாகலாம் அதற்காக மாணவர்களை வஞ்சிக்கலாமா?
* சாதிக்க துடித்தவரை துடிதுடித்து செத்திட தூண்டிய சதிகாரக்கூட்டமே!
* படிக்க எண்ணியவரை பாடையில் ஏற்றிவிட்டீர்களே பாரத பாவிகளே.
* தினகரன் சொல்வது செயலாகும்...பிரிந்தவர்கள் இணைவார்கள் என்றார் அது நடந்தது.
* அம்மாவின் இறப்பு விசாரிக்கப்பட வேண்டும் என்றார், விசாரணை கமிஷன் அமைந்தது.
* அறுவை சிகிச்சை நடக்கும் கழகத்தில் என்றார்...புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
* டி.டி.வி.யின் பேச்சும், எழுத்தும் அரசு ஆணைகள், சட்டங்கள் ஆகும். வரலாறு அதை பதிவு செய்யும்.
* நடப்பது அம்மாவின் ஆட்சியா காவிகளின் ஆட்சியா?
* கொலையாளிகளின் ஆட்சி தொடரலாமா?
* உயிரை கொல்வது மட்டும் கொலையில்லை, உணர்வுகளை கொல்வதும் கொலைதான்.
* அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு இனி இலவச சீட் சுடுகாட்டில் மட்டும்தானா?
* அனிதா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு: ஒரு மருத்துவரை கொன்றுவிட்டு சத்துணவு ஆயாவை உருவாக்குவதுதான் சமூக நீதியா? என்று நீள்கிறது அந்த நோட்டீஸ்.
தி.மு.க.வினரே வைத்திட தயங்கும் வெந்நீர் விமர்சனங்களை எடப்பாடி மீதும், அவர் அரசு மீதும் கொதிக்க கொதிக்க கொட்டியதால்தான் இந்த கைது நடந்திருக்கிறது என்றே தெரிகிறது.