
அதிமுகவில் மிகவும் செல்வாக்கு பெற்றவராக வலம் வந்த செங்கோட்டையனுக்கு, ஏதோ கேட்ட நேரம், கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியை பறித்து ஓரம் கட்டினார் ஜெயலலிதா.
ஆனாலும், அவர் தொடர்ந்து அதிமுகவின் விசுவாசியாகவே இருந்து வந்தார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனபோதும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சசிகலா அவரை எடப்பாடி அமைச்சரவையில் அமைச்சராக்கினார். தினகரனின் தீவிர விசுவாசியாகவும் அவர் இருந்து வருகிறார்.
ஆனாலும், தம்மை அரசியலுக்கு கொண்டு வந்த செங்கோட்டையனை, அரசியலில் தலை எடுக்காமல் பார்த்துக் கொண்ட எடப்பாடிக்கு, அது மிகவும் வெறுப்பாகவே இருந்தது. ஆனாலும் சசிகலாவை மீறி அவரால், செங்கோட்டையனை எதுவும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில், மீண்டும் அமைச்சரான செங்கோட்டையனுக்கு, கொங்கு மண்டலத்தில் மீண்டும் செல்வாக்கு உயர் ஆரம்பித்து விட்டது. அதனால், கருப்பண்ணன் மூலமாக எடப்பாடி கொடுத்த இடையூறுகளும், பலன் தரவில்லை.
இருந்தாலும், கட்சியிலும், ஆட்சியிலும் தமது செல்வாக்கை நிலைநிறுத்தி கொள்ளும் வகையில், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக தொடங்கி விட்டார்.
ஒவ்வொரு வாரமும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சொந்த ஊருக்கு சென்று, மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
அத்துடன் தொகுதியில் நடைபெறும் நல்லது கெட்டது என அனைத்து நிகழ்ச்சிகளையும் குறித்து வைத்துக்கொண்டு, முடிந்த வரை நேரடியாக சென்று பங்கேற்கிறார் அல்லது விசாரிக்கிறார்.
மறுபக்கம், நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற கல்வி துறை செயலாளர் உதயசந்திரனிடம், என்னால் உங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது, தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்த என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் செய்யுங்கள், நான் ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதை தொடர்ந்தே, தேர்வு முடிவுகளில் ரேங்க் ஒழிப்பு, பதினோராம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, சீருடைகள் மாற்றம் என்று பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
தர வரிசை முறையை திரும்ப கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த கொங்கு கல்வி நிறுவன அதிபர்களின் கோரிக்கையையும் அவர், எந்தவித தயக்கமும் இன்றி நிராகரித்துள்ளார்.
மேலும், ஆசிரியர் இட மாறுதல்கள் இந்த வருடம் எந்த குழப்பமும் இல்லாமல் நேர்மையாக நடந்திருக்கிறது. கல்வி அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்க, அனைத்து அலுவலகங்களிலும் சீருடை இல்லாத காவலர்களையும் பணியமர்த்தி உள்ளார்.
இவை அனைத்தும், செங்கோட்டையன் – உதயசந்திரன் கூட்டணிக்கு, மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து தந்துள்ளன. இதனால், கட்சி மற்றும் ஆட்சியில் செங்கோட்டையனின் ரேட்டிங் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படியே தொடர்ந்தால், கொங்கு மண்டலம் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் செங்கோட்டையனின் செல்வாக்கு பெருகிவிடும் என்ற அச்சத்தில் இருக்கும் எடப்பாடி, அவரை எப்படி தட்டி வைக்கலாம்? என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தினகரன், ஜாமினில் வருவதால், செங்கோட்டையனின் செல்வாக்கு இன்னும் உயர்வதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால், நேரடியாக மோதாமல், மறைமுக அரசியல் சதுரங்க வேட்டை நடத்த எடப்பாடி திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.