
மேக்கப் போட்டு ஹீரோயின்களோடு டூயட் பாடிக் கொண்டிருந்த நடிகர்கள் பலரும், தற்போது சமூகப் பிரச்சனைகளையும், அரசியல் குழப்பங்களையும் வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் சித்தார்த்.
லவ்லி பாய் என்று சமகாலப் பெண்களால் கொண்டாடப்படும் சித்தார்த், தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குமுறித் தள்ளியிருந்தார்.
“நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணமே இப்போது அனைவரின் மனதிலும் உள்ளது. குழந்தைகளும் சட்டசபையில் என்ன நடக்கிறது என கேட்டு, பார்த்து தெரிந்துக்கொள்ளட்டும். இந்த நாட்கள் ஜனநாயகத்தில் வெட்கக்கேடானது” என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திரைப்படம் வெளியிடுகிறாரோ இல்லையோ சமூகப் பிரச்சனைகள் தொடர்பான இவரது டூவிட்டுகள் மட்டும் மிஸ் ஆவதில்லை.. மாட்டுக்கறி தடை விவகாரத்திலும் மத்திய அரசை சரமாரியாக காரசாரமாக விமர்சித்திருக்கிறார்.
"மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்த இந்து தேசப் பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள். கால்நடைகள் கொல்வது பற்றியான விஷயம் தேவையற்றது. அது மக்களை மூர்க்கமடையத்தான் செய்கிறது. மாநில அரசு இந்த முடிவுக்கு இசைந்து கொடுத்தாலும் இல்லையென்றாலும், மத்திய அரசு இதிலிருந்து விலகியே இருக்க வேண்டும். நம்மில் பலர் 'பக்தாஸ்' அல்ல. நாம் வெறும் இந்தியர்கள். வாழு, வாழவிடு. வெறுப்பை நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.