
ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சால் நிலைகொத்திப் போயிருந்த தமிழக அரசியல், டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் பரபரப்புக்குள்ளாகி உள்ளது.
இரட்டை இலை லஞ்ச வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினகரனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதும், அவர் மறைவுக்கு பிறகும் பார்ட் டைம் பொலிடீஷியனாக வலம் வந்த தினகரனை அசுர பலத்தோடு முழுநேர அரசியல்வாதியாக மாற்றியிருக்கிறது திகார் சிறைவாசம்.
இரட்டை இலை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயன்றார் என்பதே தினகரன் மீதான பிரதானக் குற்றச்சாட்டு. ஆனால் ஆணையத்தின் எந்த அதிகாரிக்கு டிடிவி.தினகரன் லஞ்சம் அளிக்க முயன்றார் என்ற கேள்விக்கு டெல்லி போலீசாரிடம் உரிய பதில் இல்லை.
மேலும் சுகேஷ் சந்திரசேகர் எந்த அதிகாரியிடம் பண பேரம் நடத்தினார் என்ற தகவலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. பொத்தாம் பொதுவான சாடலாகவே இரட்டை இலை லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
உள்ளபடியே சொல்லப்போனால் அரசியல் பின்புலத்தோடு இவ்வழக்கு பின்னப்பட்டுள்ளது அப்பட்டமாகவே தெரிகிறது. வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக லஞ்ச வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் பின்னணி இருப்பதாக நேற்றும் இன்றும், என்றும் சொல்லப்படும். பா.ஜ.க. அரசு மீது தினகரன் கடுங்கோபத்தில் இருப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கக் கூடும்..
ஆனால் மாறாக பா.ஜ.க.வுக்கு அவர் நன்றியே சொல்லுவார்.
அதிகார மட்டத்தில் மட்டுமே இதுவரை காட்சியளித்து வந்த தினகரனை அடிமட்டத் தொண்டன் முதல்,அரசியலை கரைத்துக் குடித்த ஜாம்பவான்கள் மத்தியிலும் ஹெச்.டி குவாலிட்டியில் கிரிஸ்டல் கிளியராக காட்சிப்படுத்தியிருக்கிறது இரட்டை இலை லஞ்ச வழக்கு.
தினகரனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது பா.ஜ.க.வுக்கு எந்த சறுக்கலையும் ஏற்படுத்தப் போவதில்லை. சொல்லப் போனால் ஓஹோ வளர்ச்சிக்கே திகார் சிறைவாசம் டிடிவிக்கு உதவியிருக்கிறது.
டிடிவி.தினகரன் ஜாமீன் பெற்றிருப்பது ஓ.பன்னீர்செல்வத்தை விட எடப்பாடியையே அதிகம் அதிர்ச்சியுறச் செய்யும். அளிக்கப்பட்ட அசைன்மெண்டுகளை அசால்டாகக் கருதிய அவருக்கு இனி பிரச்சனைகள் ஆரம்பிக்கும் என்கின்றனர் உள்விவரமறிந்தவர்கள்..
டிடிவி தினகரனுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆகாது என்ற விமர்சனம் பொதுவெளியில் வைக்கப்பட்டாலும், அது உண்மையில்லை என்கின்றனர் ஆரம்பகால அதிமுகவினர். டிடிவி மீது தினகரனுக்கு அளவுகடந்த மரியாதை இருப்பதாகக் கூறும் அக்கட்சியினர் இருவரும் அன்ட்கோ போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கின்றனர்.
பந்து தினகரனின் கோர்ட்டில் தான் உள்ளது. அடித்து ஆடப் போகிறாரா அல்லது அமைதியாக வேடிக்கை பார்க்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...