
சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை திநகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரமாண்டமான ஜவுளி கடையான தி சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மின்கசிவு காரணமாகதான் இந்த தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நேற்று முழுவதும் தீயை அணைக்க போராடி வந்தனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதை தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் முற்பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் கட்டிடம் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் கட்டிடம் உறுதி தன்மை இழந்துள்ளதால் 3 நாட்களில் தரைமட்டமாகும் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனிடையே சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி முறையான அனுமதி வாங்காத கட்டிடம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதுகுறித்த வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சில்க்ஸில் நடந்தது தீ விபத்தா இல்லை நாச வேலையா என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் எனவும், விதிகளை மீறி கட்டடம் கட்டுவதை அரசு தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விதி மீறிய கட்டிட உரிமையாளர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிகொண்டு அனுமதி தந்துவிடுகிறார்கள் எனவும் இனி இதுபோன்ற தீ விபத்து நடக்காதவாறு அரசு பார்த்து கொள்ள வேண்டும் எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.