ரவுடிகளை இறக்கி ரவுண்டு கட்டபோகிறார் EPS.. தொண்டர்கள் ரத்தம் சிந்த விரும்பவில்லை OPS..கதறும் Ex நிர்வாகி.

By Ezhilarasan BabuFirst Published Jun 20, 2022, 7:38 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ரவுடிகளை இறக்கி வன்முறை செய்ய திட்டமிட்டிருப்பதாக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ரவுடிகளை இறக்கி வன்முறை செய்ய திட்டமிட்டிருப்பதாக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். எனவே பொதுக்குழுவுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அல்லது பொதுக்குழுவுக்கே தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க வகையில் தீர்மானம் நிறைவேற்ற அவரது ஆதரவாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் இருந்து தன்னை ஓரம்கட்ட முயற்சிகள் நடப்பதை உணர்ந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமைக்கு எதிராக  பேசி வருகிறார். அதே போல் அதிமுக பொதுக்குழு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் எழுதியுள்ளார், இந்நிலையில் முன்னாள் அதிமுக நிர்வாகி பெங்களூர் புகழேந்தி அதிமுக பொதுக்குழுவுக்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என  காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-  தமிழகம் முழுதும் பொதுக்குழு கூட்டத்தின்போது அராஜகம் செய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர், அக்கூட்டத்தில் ரவுடிகளை இறக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, எனவே அதிமுக பொதுக்குழுவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதன்காரணமாகவே ஓபிஎஸ் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மொத்தத்தில் அவர்கள் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனே இந்த கூட்டத்தை நடத்த உள்ளனர். பொதுக்குழு கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கக்கூடாது, அதையும் மீறி அனுமதி வழங்கினாலும் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எடுக்கும் முடிவு தான் இறுதியான முடிவு, தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை ஓபிஎஸ் விரும்பவில்லை இந்த பிரச்சனையில் சமூகமாக சென்றுவிடலாம் என கூறிய பிறகும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்க தயாராக இல்லை, அதிமுகவில் நான்  பதவிக்காக வரவில்லை ஓபிஎஸ்-க்கு ஆதரவாக மட்டுமே வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!