அப்பாவி மாதிரி பேசிய எடப்பாடியும் இதுல குற்றவாளிதான்.. கேஸ் போட்டு தூக்குங்க.. கொதிக்கும் கே.பாலகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2022, 3:45 PM IST
Highlights

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளியாக சேர்த்து, அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளியாக சேர்த்து, அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கைகள் எடுப்பதுடன் உரிய குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அத்துமீறி கொலை செய்வது, உயர் அதிகாரிகளின் ஆணைப்படி செய்யப்பட்டாலும் கூட  கொலைக் குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

எனவே போராடிய மக்களின் மீது சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கிச் சூடு நடத்தி பலரது மரணத்திற்கும், பலரது உடல் உறுப்புகள் சேதப்படுத்தப்பட்டதற்கும், பலர் மீதான பொய் வழக்குகளுக்கும் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள், அந்த குற்றங்களுக்கு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்துகிறது.

இத்தகைய உயிரிழப்புகளுக்கும், அமைதி குலைவிற்கும், முதலீட்டுச் சூழல் பாதிக்கப்பட்டதற்கும் அன்றைய அதிமுக அரசு மற்றும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். எனவே, முற்றிலும் பொறுப்பற்ற முறையில் தனக்கு எதுவும் தெரியாது என்று ஊடக சந்திப்பில் அப்பாவி போல பேசி, இந்த குற்றங்களிலிருந்து தப்பிக்க அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! திசை திருப்பவே உண்ணாவிரதம்.!அப்பாவி போல நடித்தவர் தான் இபிஎஸ்.!கே. பாலகிருஷ்ணன்

தனது பொறுப்பினை மூடி மறைக்கும் நோக்கிலேயே எடப்பாடி அரசு கடைசி வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பானவர்கள் மீது சிறு நடவடிக்கை கூட மேற்கொள்ளாமல் அவர்களை பாதுகாத்து வந்துள்ளார். எனவே,  எடப்பாடி பழனிச்சாமி இக்குற்றங்களுக்கு முழு பொறுப்பாக்கப்பட்டு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! கொலை வழக்கு பதிவு செய்து இபிஎஸ்யை கைது செய்ய வேண்டும்..! - எதிர்கட்சிகள்

மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர், இத்தனை வன்மத்தோடு முன்னெடுத்த தாக்குதலுக்கும், தங்களுடைய வரம்பை மீறிச் செயல்பட்டதற்கும் நோக்கங்களும் காரணங்களும் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. ஆஷிஸ்குமார் ஐ.ஏ.எஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றம் ‘இது மாவட்ட நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா’ என்று கேள்வி எழுப்பி, வேறு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திட பணித்ததை நினைவூட்ட விரும்புகிறோம்.

எனவே, அதிகாரிகள் தவறு இழைப்பதற்கும், வரம்பினை மீறி செயல்பட்டதற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பின்னணியும், தலையீடும் இல்லையென்பதற்கான வாய்ப்புகளே இல்லை. அத்தகைய ஸ்டெர்லைட் நிர்வாகத்தை பற்றி, நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல. ஸ்டெர்லைட் உட்பட, மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பல பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை தங்களுடைய கட்டுக்குள் கொண்டுவந்து சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமாக மாறியுள்ளது.

எனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்க தமிழ்நாடு அரசு தேவையான, சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

click me!