அனில் அகர்வாலை திருப்திப்படுத்த தூத்துக்குடி படுகொலை அரங்கேற்றபட்டதா? இபிஎஸ்-ஐ எகிறி அடிக்கும் சீமான்.!

By vinoth kumar  |  First Published Oct 19, 2022, 3:13 PM IST

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 'தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்' எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை. துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது.


எடப்பாடி பழனிச்சாமி 'தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்' எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை என சீமான் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. 

Tap to resize

Latest Videos

சமூக விரோதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் விதமாக, போராட்டக்களத்தில் நடந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கிற அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை மக்கள் மன்றத்திலும், ஆணையத்தின் முன் நேர்நின்றும் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வந்தேன். அவற்றைப் பிரதிபலிப்பது போல, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை. தூத்துக்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட அவப்பெயரையும், பழிச்சொல்லையும் முழுமையாகப் போக்கி, ஆளும் வர்க்கத்தின் கோரப்படுகொலைகளைத் தோலுரித்த அருணாஜெகதீசனுக்கு எனது உளப்பூர்வமானப் பாராட்டுகளையும், பெரும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிங்க;- 13 பேர் படுகொலைக்கு காரணமான இபிஎஸ் உள்ளிட்ட ஒருத்தரையும் சும்மா விடாதீங்க! கூண்டில் ஏற்றுக!வெகுண்டு எழும் வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது, அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. பேரணி நடைபெற்ற இடத்திற்குத் தொடர்பே இல்லாது தொலைதூரத்திலுள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஜான்சி படுகொலை செய்யப்பட்டார் என்பதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலும் ஒருவர் பலியானார் என்கிற இரு சம்பவங்களே, இத்துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நிகழ்த்தியப் பச்சைப்படுகொலை என்பதற்கான சாட்சியங்களாகும். காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப்பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, தூத்துக்குடி மக்களைச் சுட்டுக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; மக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாக நின்றார்கள் என்பதும் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்றுகுவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பதை அருணா ஜெகதீசன் ஆதாரத்தோடு உறுதிசெய்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு குறித்தான முன் எச்சரிக்கை மக்களுக்குக் கொடுக்கப்படாததும், சுடப்பட்டவர்களில் ஒருவர்கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்டப்படுகொலை என்பதை ஆணித்தரமாகக் கூற போதுமான காரணமாகும்.

போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை அறியப் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் கட்டாயம் சீருடையில்தான் வர வேண்டும் எனும் விதியிருக்கும்போது, சீருடை அணியாத காவலர்கள் அதிநவீனத்துப்பாக்கியோடு எப்படிக் களத்திற்கு வந்தார்கள்? துப்பாக்கிச்சூடு நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே எப்படி அவர்களுக்குத் தெரிந்தது? கூட்டத்தைக் கலைக்க வழிவாய்ப்புகள் இருந்தும் அதனைச் செய்யாது, துப்பாக்கிச்சூட்டைக் கையிலெடுத்தது எதற்காக? எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், கூட்டத்திலிருந்து தப்பியோடியவர்களைக்கூட விடாமலும், காவலர்கள் வாகனத்தின் மீது ஏறி நின்று, போராட்டக்காரர்களைக் குறிவைத்துச் சுட்டுக்கொன்றது எதனால்? போராட்டத்தில் சுடப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில்கூட துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவையென்ன வந்தது? இவ்வளவு பெரிய போராட்டம் நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் நாளன்று, தூத்துக்குடியில் இல்லாது மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டிக்கு ஏன் சென்றார்? 

துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது வட்டாட்சியர்கள்தான் எனக்கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? நாடே உற்றுநோக்கிக்கவனிக்கிற ஒரு போராட்டத்தில், மத்திய/மாநில அரசின் அனுமதியில்லாமல் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளிக்கிற அளவுக்கு வட்டாட்சியர்களுக்கு இந்த அமைப்பில் அதிகாரமும், வலிமையும் இருக்கிறதா? என நீளும் கேள்விகள் யாவும் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாக மண்ணின் மக்களைக் கொன்றொழிக்க அன்றைய அரசுகள் நிகழ்த்திய சதிச்செயலை அம்பலப்படுத்துகிறது. நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில், காக்கை, குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; காவல் துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க;-  தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! கொலை வழக்கு பதிவு செய்து இபிஎஸ்யை கைது செய்ய வேண்டும்..! - எதிர்கட்சிகள்

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி சுடலைக்கண்ணு மட்டும் 17 சுற்றுகள் சுட்டுள்ளார் எனவும், 4 இடங்களில் அவரைச் சுட வைத்ததன் மூலம், அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது எனவும், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி படுகொலை எனவும் கூறியுள்ளது ஆணையத்தின் அறிக்கை. 14  உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற் பொறுப்பேற்க வேண்டிய அன்றைய முதல்வர் 'தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்' எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை. துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது.

 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? எதற்காகப் பச்சைப்படுகொலைகளை அரங்கேற்றினார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? பிரதமர் மோடியை மனம்நிறைவடையச் செய்யவா? இது மன்னிக்கவே முடியாத கொடுந்துரோகம்! வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களையே அரச வலிமையைக் கொண்டு, படுகொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ஆகவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு 10 இலட்ச ரூபாயும் துயர்துடைப்புத்தொகை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, அவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார். 

click me!