
போக்குவத்து தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொழிலாளர்களுடன் 5கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளை ஆரம்பித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அமைச்சர்களை அவர்களது மாவட்டங்களுக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.