
அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் மதுரை பைபாஸ் ரோட்டில் தெர்மாகோல் வைத்து போராட்டம்.
சிலரை சிலவற்றால்தான் அடையாள படுத்த முடியும். ஒருவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை கூட, அவர்களின் பெயர்களுக்கு முன்னால் அடைமொழியாக மாறிவிடுவதுண்டு.
அப்படித்தான், வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க, செல்லூர் ராஜூ வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு தண்ணீர் மீது தெர்மாகோல் அட்டைகளை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தார். அவருடன் சென்ற அனைவரும் தெர்மாகோல் அட்டைகளை வைத்து தண்ணீர் மீது டிசைன், டிசைனாக மூடினர். இதை படமெடுத்த ஊடகத்தினர் வலைதளவாசிகளுக்கு வேலை கொடுத்தனர்.
இதுமட்டுமல்ல, இந்த திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் தெர்மாகோல் போடப்பட்டது என்றார். ஆனால், தெர்மாகோலை மிதக்கவிட்டு, அடுத்த சில நிமிடங்களில், அவை அனைத்தும் கரை ஒதுங்கியதும், நகைச்சுவை கூத்தாகி விட்டது.
அதன் பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜு, தெர்மாகோல் ராஜு என்றே, அழைக்கப்படலானார். அந்த பெயர் மறந்துவிடாத அளவுக்கு, நெட்டிசன்களும் தொடர்ந்து மீம்ஸ் போட்டு வந்தனர்.
தெர்மாகோல் லேசாக காற்றடித்தாலே பறந்து ஓடி விடும். தண்ணீரில் மிதக்க விட்டால் விரைவில் கரை ஒதுங்கிவிடும். இது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். அதேபோல தெர்மாகோலில் செல்லோ டேப் அடித்து என்ன சொல்றது போங்க? சரி அதா விட்ருவோம் இவ்ளோ மேட்டரு அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எப்படி தெரியாமல் போனது? அவ்வளவு பெரிய வைகை அணை தண்ணீரை தெர்மாகோல் போட்டு மூட வேண்டும் என ஐடியா கொடுத்தது யார் என நெட்டிசன்கள் வச்சு செய்தனர்.
இந்நிலையில், அவரை மீண்டும் வெறுப்பேற்றும் அள்வுக்கு, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள், மதுரை பைபாஸ் சாலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து, தெர்மாகோலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உதவுகிறதோ என்னவோ, மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு பெரிதளவில் உதவி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.