
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் சசிகலா சிறை சென்றுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, தனக்கு உள்ள எம்எல்ஏக்களின் பட்டியலையும் வழங்கினார்.
நேற்று இரவு மீண்டும் கவர்னர் மாளிகை சென்ற, எடப்பாடி பழனிச்சாமி, தங்களுக்கு ஆட்சி அமைக்கும் முழு தகுதி உள்ளது, ஏற்கனவே ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை அளித்துவிட்டோம். விரைவில் ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும் எனகவர்னரிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு கவர்னரை சந்திக்க வரும்படி, ராஜ்பவனில் இருந்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் கடந்த 3 நாட்களில், 3வது நாளாக எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க ராஜ்பவன் சென்றார்.
அங்கு சுமார் அரை மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு, எடப்பாடி பழனிச்சாமிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக, எடப்பாடி பழனிச்சாமியை, பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.