30 ஆண்டுகளில் முதன் முறையாக முன்கூட்டியே நடைபெறும் தேர்தல்... தமிழக தேர்தலின் டைம் டிராவல்..!

By Asianet TamilFirst Published Feb 27, 2021, 8:41 AM IST
Highlights

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. 
 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் முன்கூட்டியே நடத்தப்படும் தேர்தலாக இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் அமைந்துள்ளது. 1991-ஆம் ஆண்டு முதலே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு மே 25-இல் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டதால், தேர்தல் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
1996-ஆம் ஆண்டில் மே 2-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 2001-ஆம் ஆண்டில் மே 10-ஆம் தேதியும், 2006-ஆம் ஆண்டில் மே 8-ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால், 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13-ஆம் தேதியே நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கையோ மே 13-ஆம் தேதிதான் நடைபெற்றது. தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாதம் கால அவகாசம் இருந்ததை அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி விமர்சனம் செய்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 16-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையோ மே 2-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டைப் போலவே தேர்தல் முடிவை அறிந்துகொள்ள சுமார் ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் முன்கூட்டியே நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலாகவும் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் அமைந்துள்ளது. 

click me!