50 ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரியில் இடைத்தேர்தல்... அன்று காமராஜர் வெற்றி... இன்று யார்?

By Asianet TamilFirst Published Feb 26, 2021, 10:18 PM IST
Highlights

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் 50 ஆண்டுகள் கழித்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
 

கன்னியாகுமரி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 28 அன்று உயிரிழந்தார். இதனால், கன்னியாகுமரி தொகுதி காலியானது. பிப்ரவரி 28-க்குள் கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்ந்து இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் ஏப்ரல் 6 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது இரண்டாவது முறையாகும். கன்னியாகுமரி தொகுதியின் முந்தைய பெயர் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியாகும். கடந்த 1967-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மார்ஷல் நேசமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், 1968-ம் ஆண்டு அவர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தத்தால், 1969-ம் ஆண்டில் இடைத்தேர்தல் நடந்தது.
ஏற்கனவே 1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெருந்தலைவர் காமராஜர், நாகர்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு தற்போது 52 ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் மறைவால் இரண்டாவது முறையாக மீண்டும் அத்தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. அன்று இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் யார் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பை இடைத்தேர்தல் எகிற வைத்துள்ளது. 
 

click me!