மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தலா..? மோடி. அமித் ஷாவுக்காக எடுத்த முடிவா இது..? வெளுத்துகட்டிய மம்தா பானர்ஜி!

By Asianet TamilFirst Published Feb 26, 2021, 9:36 PM IST
Highlights

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவு பாஜகவின் வசதிக்கு ஏற்ப எடுக்கப்பட்டுள்ளதா? பிரதமர் நரேந்திரமோடி, அமித் ஷா ஆகியோரின் ஆலோசனையுடன் இது செய்யப்பட்டுள்ளதா என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

அஸ்ஸாம், மேற்கு வங்காளம், தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக தீவிர முனைப்பு காட்டிவருகிறது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பேட்டி அளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அஸ்ஸாமில் தேர்தலை மூன்று கட்டங்களாகவும், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியும் எனில்,, மேற்கு வங்காளத்தில் மட்டும் தேர்தலை  ஏன் எட்டு கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன? பாஜகவின் வசதிக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? பிரதமர் நரேந்திரமோடி, அமித் ஷா ஆகியோரின் ஆலோசனையுடன் இது செய்யப்பட்டுள்ளதா? அவர்களின் பிரச்சாரத்தை எளிதாக்குவதற்காக இது செய்யப்பட்டிருக்கிறதா? ஆனால்,  இது பாஜகவுக்கு உதவாது. நாங்கள் அவற்றை எல்லாம் முறியடிப்போம்.


ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு கட்டங்களில் எப்படி தேர்தல் நடத்த முடியும். நாங்கள் தெற்கு 24 பர்கானாவில் சக்திவாய்ந்தவர்கள் என்பதால் இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜக மக்களை மதத்தால் பிளவுபடுத்த முயற்சி செய்கிறது. மாநில தேர்தல்களில் செல்வாக்கை செலுத்த மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. அவர்களின் எல்லா சித்து விளையாட்டுகளும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.  மேற்கு வங்காளத்தை அவமதித்த பாஜகவுக்கு வங்காள பெண்கள்  தகுந்த  பதில் அளிப்பார்கள்” என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

click me!