பொதுமக்களுக்கு குட்நியூஸ்... இ-பாஸ் எளிமையாக்கப்படும்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

By vinoth kumarFirst Published Aug 6, 2020, 1:21 PM IST
Highlights

இ-பாஸ் நடைமுறையில் சிக்கல் இருப்பதாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், தொழிற்சாலையில் பணிபுரிபவர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தால் அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும். 

இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த குழுக்கள் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று அறிவித்தது. நெருங்கிய உறவுகளின் திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவத்திற்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், உயிர் காக்கும் மாத்திரை வாங்குவது உள்ளிட்ட நியாயமான காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தவர்களுக்கு கூட நிராகரிக்கப்பட்டது. ஆனால், டிராவல்ஸுகளுக்கு மட்டும் தாராளமாக இ-பாஸ் கிடைப்பதாகவும், இதற்காகவே இடைத் தரகர்கள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முறைகேடுகளைத் தவிர்க்க இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது எளிமையாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இ-பாஸ் வாங்குவதை எளிமைப்படுத்த குழு அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து இன்று அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து விவசாய சங்கங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழு பிரநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய முதல்வர், கடந்த வருடம் பருவ மழை நன்றாக பெய்த காரணத்தால் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் வேளாண் பொருட்களை எடுத்துச் செல்ல எவ்வித தடையுமில்லை. கொரோனா நேரத்திலும் வேளாண் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் வேளாண் பணிகளுக்கு எவ்வித பாதிப்புமில்லை என்று தெரிவித்தார்.

இ-பாஸ் நடைமுறையில் சிக்கல் இருப்பதாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், தொழிற்சாலையில் பணிபுரிபவர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தால் அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் இ-பாஸை மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பித்தால் போதுமானது. வெளி மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம். இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

click me!