ஜெயலலிதாவோடு நடித்திருப்பேன்... சிவாஜி கணேசன் போல் ஆகியிருப்பேன்! துரைமுருகன் பேச்சால் அதிர்ந்த பேரவை

First Published Jun 27, 2018, 2:31 PM IST
Highlights
Duraimurugan Speech at the Assembly


சட்டப்பேரவையில் நேற்று திமுக எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்திய நிலையில், இன்றும் அவரது பேச்சால் பேரவையே அதிர்ந்தது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நேற்று எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, இரவு நேரத்தில் இசையைக் கேட்டபடி தூங்குவது
சுகமானது என்றும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நாட்டுப்புற பாடல்கள் நன்றாக இருப்பதாகவும் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அப்போது பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துரைமுருகன் இசையை மட்டும் கேட்பாரா, இல்லை மிட் நைட் மசாலா பார்ப்பாரா? என்றார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த துரைமுருகன், இரவில் ஜெயக்குமார் பார்ப்பதை எல்லாம் நான் பார்க்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து துரைமுருகன் பேசினார். அப்போது கிராமிய பாடல்களைப் பாடிக் காட்டினார். அவரது பாடலைக் கேட்டு அசந்துபோன சபாநாயகர் தனபால், நீங்கள் நாடகங்களில் நடித்ததுண்டா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன், நான் சிறுவயதில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல் இந்த உலகமே நாடக மேடை. இங்கு நாம் அனைவருமே நடித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நடிக்கிறோம். சபாநாயகராகிய நீங்களும் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறினார். துரைமுருகனின் இந்த பேச்சைத் தொடர்ந்து உறுப்பினர்களின் சிரிப்பலையால் பேரவையே அதிர்ந்தது.

இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர், துரைமுருகனைப் பாராட்டும் விதமாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2001 ஆம் ஆண்டு அவையில் பேசும்போது, துரைமுருகன் நவசரம் வெளிப்படும விதமாக பேசுவார் என்று புகழ்ந்திருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டினார்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன், நான் சினிமா துறைக்குப் போயிருந்தால், ஜெயலலிதாவோடு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். நானும் சிவாஜி கணேசன் போன்று ஆகியிருப்பேன் என்று கூறினார். அவரது பேச்சைக் கேட்ட உறுப்பினர்களின் சிரிப்பலையால் பேரவையே அதிர்ந்தது. துரைமுருகனும் சிரித்துக் கொண்டே தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

click me!