வருமான வரித் துறையினர் விரித்த வலையில் முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் சிக்கியது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பழுத்த அரசியல்வாதியான அவர், தன் மகனை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். தேர்தல் செலவுகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தை அவர் திரட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்தலில் வேட்பாளர்கள் சார்பில் செய்யப்படும் செலவினங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தைத் தாண்டி வருமானத் துறையும் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது.
தற்போது வேலூர் தொகுதி மீது வருமான வரித்துறையினரின் பார்வை குவிந்துள்ளதற்கு துரைமுருகன் பேசிய பேச்சே காரணம் என்கிறார்கள் திமுகவினர். மார்ச் 20 அன்று வேலூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துரைமுருகன், “வேலுார் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில், அதிக ஓட்டுகளைப் பெற்று தரும் நிர்வாகிகளுக்கு 50 லட்சம் ரூபாய் தருவேன்” என்று துரைமுருகன் பேசியதாகக் கூறப்படுகிறது. துரைமுருகனின் இந்தப் பேச்சுக்கு பிறகே வருமான வரித்துறை உஷார் அடைந்து துரைமுருகன் வீட்டில் ரெய்டுக்கு வந்தனர்.
முதல் ரெய்டில் ரூ. 10.50 லட்சமும் சில பெண் டிரைவ்களும் மட்டுமே கைப்பற்றப்பட்டதால், துரைமுருகனும் திமுகவினரும் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால், பென் டிரைவில் வாக்காளர் பட்டியல்களோடு இருந்த சில ரகசிய குறியீடுகள் சந்தேகத்தைக் கிளப்பியதால், வருமான வரித்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிறகே துரைமுருகனின் நண்பர்கள், அவருடைய ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களைக் குறித்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்த முடிவு செய்ததாகவும் வருமான வரித்துறை சார்பில் கூறப்படுகிறது. துரைமுருகன் வீட்டில் முதல் கட்ட ரெய்டுக்கு பிறகு உள்ளூர் வருமான வரித்துறையினரை தவிர்த்து வெளி மாவட்ட வருமான வரித்துறையினர் அழைக்கப்பட்டனர். துரைமுருகன் தரப்பில் கோடிக்கணக்கான பணம் இருக்கலாம் என்பதை உறுதி செய்த பிறகு இத்துறையினர், முன்னேற்பாடாக வெளியூர் அதிகாரிகளை வரவழைத்ததாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் இணைந்தே இந்த ரெய்டில் ஈடுபட்டிருக்கின்றன. நேற்று நடந்த ரெய்டில்11.53 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் சிக்கியது துரைமுருகனை மட்டுமல்ல, திமுகவினர் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.