முல்லைப் பெரியாறு அணை விவகாரம்… உச்சநீதிமன்ற ஆணைப்படியே நீர் திறக்கப்பட்டது… துரைமுருகன் விளக்கம்!!

By Narendran SFirst Published Nov 9, 2021, 12:01 PM IST
Highlights

தமிழக அரசின் அனுமதியை பெறாமல் அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே இடுக்கி அணைக்கு தண்ணீரை கேரளா அரசு திறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆணைப்படியே முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறக்கப்பட்டது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள155 அடி உயர முல்லைப் பெரியாறு அணையால் தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் வசதியை பெறுகின்றன. மேலும் 10 லட்சம் விவசாயிகள் தங்களின் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையின் நீரையே நம்பி உள்ளனர். இந்த அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். 2014-ம் ஆண்டு 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில்தான் கடந்த வாரம், தமிழக அரசின் அனுமதியை பெறாமல் அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே இடுக்கி அணைக்கு தண்ணீரை கேரளா அரசு திறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் ஏன் திறந்து விட்டார்கள் எனவும், கேரள மாநில அமைச்சர்கள் தண்ணீரை திறக்கலாமா எனவும் எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் முல்லைப்பெரியாறில் தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போது பேசுகையில்,  உச்சநீதிமன்ற ஆணைப்படியே முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறக்கப்பட்டது என்றும் ரூல் கர்வ் என்ற விதிப்படி முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை பராமரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணைப்படி அக்டோபர் 29 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 138 அடியாகவே இருக்க வேண்டும் என்ற நிலையில் அன்று அணையில் 138.75 அடியாக நீர் இருந்ததால் ரூல் கர்வ் விதிப்படி நீர்மட்டத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக கூறினார். நீர்மட்டம் உயர்ந்ததால் தான் 138 அடியாக குறைக்க முல்லைப்பெரியாறில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்றும் முல்லைப்பெரியாறில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட போது கேரள அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் அங்கு தற்செயலாக வந்திருந்தனர் என்றும் கூறிய அமைச்சர் துரைமுருகன், முல்லைப்பெரியாறு அணையில் 15 மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி அளித்திருந்தது பற்றியும் விளக்கம் அளித்தார். கேரள அரசு அனுமதி அளித்தது மாநில உள்துறை அமைச்சருக்கு தெரியாது என்பது விநோதமாக உள்ளது என்று கூறிய அவர், கேரள வனத்துறை அமைச்சருக்கு தெரியாமல் அத்துறை அதிகாரி மரம் வெட்ட அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள வனத்துறை தலைமை அதிகாரி தான் 15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதி கடிதத்தை தமிழ்நாட்டு அரசுக்கு அனுப்பினார் என்றும் எந்தெந்த மரங்களை வெட்ட வேண்டும் என்ற எண்களையும் குறிப்பிட்டு கேரள அதிகாரி கடிதம் அனுப்பியிருந்தார் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், வெட்டப்படும் மரங்களை அந்த வட்டாரத்தில் இருந்து வேறு எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்தார். வனத்துறை தலைமை அதிகாரியே கடிதம் எழுதியுள்ளதால் அதை கேரள அரசின் ஒப்புதலாக தமிழ்நாடு அரசு கருதியதாக கூறிய அமைச்சர் துரைமுருகன், மரம் வெட்ட அனுமதி அளித்ததால் கேரள அரசுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார் என்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார் என்றும் தெரிவித்தார்.

click me!