காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒரே நேரத்தில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தேமுதிக தரப்பில் தனிப்பட்ட சந்திப்பு இதில் அரசியல் இல்லை என்று கூறிவிட்டு சென்றனர். யாரும் எதிர்பாராத விதமாக கூட்டணி தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தனர் என பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் துரைமுருகன் வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், துரைமுருகனுடன் 10 நாட்களுக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். சுதீஷ் பேட்டி தொடர்பாக துரைமுருகன் கூறுகையில் தேமுதிக தற்போது பரிதாப நிலையில் இருந்து வருகிறது. அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை என நக்கலான பதிலை அளிந்திருந்தார். அவர்களின் இரட்டை நிலைப்பாடு அம்பலமானதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனி தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தடை விதித்தார். இதனால், துரைமுருகன் மீது சுதீஷ் கடும் கோபத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் வேலூர் காந்தி நகரில் உள்ள டவுன்சிப் பிரிவில் துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு திடீரென 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திரண்டு வந்து திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதை ஏற்கனவே அறிந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே தேமுதிகவின் முற்றுகையிட வந்ததை அறிந்த திமுகவினர் ஏராளமான அங்கு குவிந்தனர். இதனால் மோதல் போக்கு ஏற்படும் சூழல் உருவானதால் காவல்துறையினர் தற்போது தேமுதிகவினரை கைது செய்துள்ளனர். வேலூரில் துரைமுருகன் வீடு அமைந்துள்ள பகுதியில் கல்லூரி மற்றும் காட்பாடி பிரதான சாலை என்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இவர்களது போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேமுதிக மீது கடுப்பில் இருக்கும் துரைமுருகன் மேலும் மேலும் தவறும் செய்வது அவருக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவையெல்லாம் விஜயகாந்துக்கு தெரிந்தே நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை.